4-வது நாளாக சாலை மறியல்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,073 பேர் கைது
4-வது நாள் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,073 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை அருகில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட வருவாய்துறை ஊழியர் சங்க தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் இடத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் மற்றும் போலீசார் 623 பெண்கள் உள்பட 1,073 பேரை கைது செய்து அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து அவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் அரியலூர் பஸ் நிலையத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தால் பல தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளிகள் திறக்காமல் மூடப்பட்டிருந்தது. வேலை நிறுத்த போராட்டத்தால் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறை முதன்மை அதிகாரி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இதில் நேற்று காலை முதலே தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகள் குவிந்தனர்.
Related Tags :
Next Story