திருமணம் செய்வதாக கூறி பள்ளி மாணவி கடத்தல் போக்சோ சட்டத்தில் தையல் தொழிலாளி கைது
ஆண்டிப்பட்டி அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற தையல் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கண்டமனூர்,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 32). தையல் தொழிலாளி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
அந்த பகுதியில் வசிக்கும் 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவிக்கும், நாராயணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வத்தலக்குண்டுவுக்கு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியை நாராயணன் கடத்தி சென்றதாக அவருடைய தந்தை ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் போலீசார் வத்தலக்குண்டுவுக்கு சென்றனர். அங்கு இருந்த சிறுமியை மீட்டு தேனியில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நாராயணனை கைது செய்தனர். சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story