நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் வெற்றி பெற்று பிரதமரை தேர்வு செய்யும் சீமான் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் வெற்றி பெற்று பிரதமரை தேர்வு செய்யும் சீமான் பேட்டி
x
தினத்தந்தி 26 Jan 2019 3:15 AM IST (Updated: 26 Jan 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகள் வெற்றி பெற்று பிரதமரை தேர்வு செய்யும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

நெல்லை, 

நெல்லையில் இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:–

இலங்கையில் போரை நடத்தி மக்களை கொன்றது காங்கிரஸ் கட்சி. அவர்களுடன் துணை நின்றது தி.மு.க. ஆனால் அப்போது வலிமைமிக்க எதிர்கட்சியாக இருந்தது பாரதீய ஜனதா. 2ஜி அலைக்கற்றை ஊழலுக்காக ஒரு மாதம் நாடாளுமன்றத்தை முடக்கிய பா.ஜனதா, இலங்கை இன படுகொலைகளை தடுக்க என்ன முயற்சி செய்தார்கள்?. ஈழ படுகொலை நடந்த போது பா.ஜனதா கருத்து தெரிவிக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க என்ன முயற்சி செய்தீர்கள்.

ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற கேட்கிறார்கள். அதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். கோடநாடு பிரச்சினையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் செய்திருக்கிறார் என்று கூறப்பட்டும் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு கீழ் உள்ள காவல்துறை எப்படி நேர்மையாக விசாரணை நடத்தும்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டத்தை நான்தான் தூண்டி விட்டதாக கூறினார்கள். நாம் தமிழர் கட்சியினர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முதன்முதலாக போராட்டம் நடத்தியது நாங்கள்தான். காங்கிரஸ் கட்சி குடும்ப சொத்து, இதில் குடும்ப உறுப்பினர்களுக்கு கட்சியில் பொறுப்பு கொடுப்பதில் தவறு ஏதுமில்லை என கருதுகிறேன்.

தேர்தல் ஆணையர் வாக்குச்சீட்டு முறைக்கு வரமுடியாது என்று கூறுகிறார். மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தை ‘‘ஹேக்’’ செய்து 2014–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதாக கூறுகின்றனர். சமீபத்தில் நடந்த மாநில தேர்தல்களில் விட்டுக்கொடுத்து, நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற பாரதீய ஜனதா முயற்சி செய்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் பாரதீய ஜனதா அரசு என்ன மாற்றத்தை செய்தது. மோடியால் கடந்த 5 ஆண்டுகளில் கடன்தான் கூடிஉள்ளது.

தமிழ்நாட்டில் தாமரை மலரும் என்று பொய் பேசி வருகின்றனர். கருத்து கணிப்பில் பா.ஜனதாவுக்கு ஓட்டுபோடுவோம் என்று யாரும் கூறவில்லை. கருத்துகளை உருவாக்குகிறார்கள்.

மாநில கட்சிகள்தான் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று, இந்தியாவின் பிரதமரை என்று தீர்மானிப்பார்கள். இந்தியாவில் கூட்டணி ஆட்சி அமைந்தால்தான், கூட்டாட்சி தத்துவம் சிறப்படையும். ஜனநாயகம், அதிகாரம் பரவலாக்கப்படும். மாநில கட்சிகள் அதிகாரம் பெற்று இந்தியாவை கூடி பேசி கூட்டாட்சி செய்தால்தான் சரியானதாக இருக்கும்.

மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தேர்தலுக்காக அடிக்கல் நாட்டப்படுகிறது. ஆட்சி முடிவடையும் போது நலத்திட்டங்களை அறிவித்து, அடிக்கல் நாட்டுகின்றனர். தேர்தல் முடிந்த உடன் ஒருமித்த கருத்துடன் புதிய பிரதமரை தேர்வு செய்ய வேண்டும்.

கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போதே விஜயகாந்த் கட்சி தொடங்கி வெற்றி பெற்றார். ஆனால் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் யாரும் இல்லாத திடலில் கம்பெடுத்து சுழற்றுகின்றனர். ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது, அவர் நடிப்பை நாங்கள் பாராட்டுகிறோம், வரவேற்கிறோம். ஆனால் எங்களை முதல்வராகவும், தலைவராகவும் இருந்து ஆட்சி செய்வது ஆபத்தானது, அதை நாங்கள் எதிர்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story