காதலனுடன் பேசியதை தோழி கண்டித்ததால் விஷம் தின்று பெண் போலீஸ் தற்கொலை முயற்சி
காதலனுடன் பேசியதை தோழி கண்டித்ததால் விஷம் தின்று பெண் போலீஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் விசாரணை நடத்தி வருகிறார்.
தஞ்சாவூர்,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் விஜி(வயது27). நாகையை சேர்ந்தவர் சரசு(25). (இருவருடைய பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). தோழிகளான இவர்கள் இருவரும் தஞ்சை ஆயுதப்படையில் போலீசாக பணி புரிந்து வருகின்றனர். இதில் விஜிக்கு திருமணமாகி, கணவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். சரசுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் இருவரும் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர்.இந்த நிலையில் புதுக்கோட்டை சிறப்பு போலீஸ் படையில் பணி புரிந்து வரும் வாலிபர் ஒருவருடன் சரசுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். வெவ்வேறு மாவட்டங்களில் பணி புரிந்து வருவதால் செல்போன் மூலமாக தங்களது காதலை வளர்த்து வந்தனர். ஒரு நாள் சரசு, விஜியின் செல்போனை வாங்கி தனது காதலனிடம் பேசியுள்ளார்.
அன்று முதல் அந்த காதலர், விஜியிடமும் பேச தொடங்கினார். இந்த விஷயம் சரசுக்கு பல மாதங்களாக தெரியவில்லை. நாட்கள் செல்லச்செல்ல இது பற்றி அறிந்த சரசு அதிர்ச்சி அடைந்தார். உடனே விஜியின் பெற்றோரை நேரில் சந்தித்து தனது காதலனிடம் விஜி தொடர்ந்து பேசி வருவதுடன், தங்களது காதலுக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் குடியிருப்பில் இருந்தபோது விஜிக்கும், சரசுக்கும் இடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்த விசயத்தை எப்படி எனது பெற்றோரிடம் கூறலாம் என கேட்டு சரசுவை, விஜி தாக்கியுள்ளார். இதனால் கோபம் அடைந்த அவர், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கூறப்போவதாக சொல்லிவிட்டு சென்று விட்டார்.
நேற்று தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் சரசு வழக்கம்போல் கலந்து கொண்டார். ஆனால் விஜி வரவில்லை. ஒத்திகை முடிந்தவுடன் அவரது அறைக்கு சக போலீஸ்காரர்கள் சென்று பார்த்தபோது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. மாற்று சாவியை கொண்டு போலீசார், கதவை திறந்து உள்ளே சென்றபோது அங்கு விஜி எலி மருந்து(விஷம்) தின்று உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
உடனே அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story