பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு சிவக்குமார சுவாமி பெயர் சூட்டப்படும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேட்டி


பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு சிவக்குமார சுவாமி பெயர் சூட்டப்படும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேட்டி
x
தினத்தந்தி 26 Jan 2019 4:00 AM IST (Updated: 26 Jan 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் அரசின் புதிய திட்டங்களுக்கு சிவக்குமார சுவாமியின் பெயர் சூட்டப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

துமகூரு, 

பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் அரசின் புதிய திட்டங்களுக்கு சிவக்குமார சுவாமியின் பெயர் சூட்டப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

துமகூருவில் நேற்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நிருபர்களிடம் கூறியதாவது:-

போலீசாருக்கு பாராட்டு

கர்நாடக மக்களால் நடமாடும் கடவுள் என்று அழைக்கப்பட்ட மடாதிபதி சிவக்குமார சுவாமி நம்மை விட்டு பிரிந்து விட்டார். அவர் இந்த மாநிலத்திற்காக ஆற்றிய சேவைகளை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறந்து விட முடியாது. கர்நாடக மக்களின் மனதில் சிவக்குமார சுவாமி நீங்கா இடம் பெற்று விட்டார்.

சிவக்குமார சுவாமியின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த துமகூருவுக்கு வந்திருந்தனர். லட்சக்கணக்கான மக்கள் வந்திருந்தாலும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. மக்களுக்கு சிறப்பான பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதற்காக மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு, சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. கமல்பந்த், துமகூரு மாவட்ட போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

புதிய திட்டங்களுக்கு...

சிவக்குமார சுவாமியால் தான் துமகூரு மாவட்டம் உயர்ந்து நிற்கிறது. நானும் துமகூருவை சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படுகிறேன். சிவக்குமார சுவாமிக்கு பெருமை சேர்க்க, அரசின் சில புதிய திட்டங்களுக்கு அவரது பெயரை சூட்ட முடிவு செய்தேன். இதுதொடர்பாக முதல்-மந்திரி குமாரசாமியுடன் பேசினேன். அரசின் புதிய திட்டங்களுக்கு சிவக்குமார சுவாமியின் பெயரை சூட்ட முதல்-மந்திரியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

மேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் புதிய திட்டங்களுக்கு சிவக்குமார சுவாமியின் பெயர் சூட்டப்படும். அந்த திட்டங்கள் தொடர்பாக இன்று(அதாவது நேற்று) கூட முதல்-மந்திரி குமாரசாமியுடன் ஆலோசித்தேன்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Next Story