ஆபரேஷன் தாமரை திட்டத்தை கைவிடவில்லை எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தொடர் முயற்சி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
ஆபரேஷன் தாமரை திட்டத்தை பா.ஜனதா கைவிடவில்லை என்றும், எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு,
ஆபரேஷன் தாமரை திட்டத்தை பா.ஜனதா கைவிடவில்லை என்றும், எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
ஆபரேஷன் தாமரை
கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சியில் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியானது. அதே நேரத்தில் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஷ் மற்றும் ஆர்.சங்கர் தங்களது ஆதரவை திரும்ப பெற்றனர்.
மேலும் ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறினார்கள்.
ஆட்சி அமைக்க பா.ஜனதா முடிவு
இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராமநகரில் உள்ள ரெசார்ட் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் சொந்த தொகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் யாரும் தங்களது பதவியை ராஜினாமா செய்யவில்லை. இதனால் பா.ஜனதாவின் ஆபரேஷன் தாமரை தோல்வியில் முடிந்திருப்பதாக கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.
என்றாலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டு பா.ஜனதா ஆட்சி அமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா தலைவர்கள் தொடர்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எம்.எல்.ஏ.க்களை கண்காணிக்க உத்தரவு
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்வதை தடுக்க முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் தலைவர்கள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஒவ்வொரு அசைவுகளையும் தீவிரமாக கண்காணிக்கும்படி உளவுத்துறை போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எங்கு செல்கிறார்கள், யாருடன் எல்லாம் பேசி வருகின்றனர், பா.ஜனதாவினருடன் தொடர்பில் உள்ளார்களா?, தங்களது தொகுதியில் தான் எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்களா?, வேறு எங்கும் சென்று வருகிறார்களா? என்பது உன்னிப்பாக கவனிக்கும்படியும், அதுபற்றி உடனுக்குடன் தகவல் தெரிவிக்கும்படியும் முதல்-மந்திரி குமாரசாமி, உளவுத்துறை போலீசாருக்கு உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆபரேசன் தாமரையை கைவிடவில்லை
இந்த நிலையில், பெங்களூரு விதானசவுதாவில் பட்ஜெட் குறித்து விவசாய சங்கத்தினருடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது குமாரசாமி கூறியதாவது:-
கர்நாடக பட்ஜெட் பிப்ரவரி 8-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். ஒவ்வொரு துறைகளை சேர்ந்த அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறேன். மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சிக்கவில்லை என்று எடியூரப்பா கூறி வருகிறார். ஆபரேஷன் தாமரை நடைபெறவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்.
ஆனால் உண்மையில் ஆபரேஷன் தாமரை திட்டத்தை பா.ஜனதா கைவிடவில்லை. இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை பா.ஜனதாவினர் தொடர்கின்றனர். நேற்று இரவு கூட (அதாவது நேற்று முன்தினம்) காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.விடம் பேரம்
அப்போது பா.ஜனதாவுக்கு வரும்படி அந்த எம்.எல்.ஏ.வுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மிகப்பெரிய பரிசு கொடுப்பதாகவும் எம்.எல்.ஏ.விடம் சொல்லி உள்ளனர். அந்த பரிசு என்னவென்று நான் சொன்னால் ஆச்சரியமும், வியப்பும் அடைவீர்கள். அந்த அளவுக்கு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க மிகப்பெரிய பரிசு, பணம் கொடுப்பதாக பேரம் பேசி வருகின்றனர்.
ஆனால் தான் தற்போது நிம்மதியாக இருப்பதாகவும், என்னை விட்டு விடும்படியும் பா.ஜனதாவினரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூறி இருக்கிறார். இந்த தகவலை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வே என்னிடம் கூறினார்.
எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க...
எம்.எல்.ஏ.க்களுக்கு மிகப்பெரிய அளவுக்கு பரிசுகள் கொடுக்க எடியூரப்பாவால் எப்படி முடிகிறது என்று தெரியவில்லை. அதற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்றும் தெரியவில்லை. கடந்த 2008-ம் ஆண்டு முதல்-மந்திரியாக எடியூரப்பா இருந்த போது எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கினார். அது தற்போதும் தொடருகிறது.
பா.ஜனதாவினர் தங்களது வேலையை சரியாக செய்தால் எந்த பிரச்சினையும் இல்லை. எம்.எல்.ஏ.க்களை இழுக்க நினைப்பதை நான் ஒன்றும் செய்ய முடியாது. எம்.எல்.ஏ.க்களுக்கு என்ன பரிசு கொடுக்க பா.ஜனதாவினர் முயற்சிக்கின்றனர் என்பதை, அவர்களிடம் தான் நீங்கள் (நிருபர்கள்) கேட்க வேண்டும்.
இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.
Related Tags :
Next Story