கோலார் தங்கவயலில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம் கே.எச்.முனியப்பா எம்.பி. திறந்து வைத்தார்


கோலார் தங்கவயலில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம் கே.எச்.முனியப்பா எம்.பி. திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 26 Jan 2019 4:00 AM IST (Updated: 26 Jan 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

கோலார் தங்கவயலில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாஸ்போர்ட் சேவை மையத்தை கே.எச்.முனியப்பா எம்.பி. திறந்து வைத்தார்.

கோலார் தங்கவயல், 

கோலார் தங்கவயலில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாஸ்போர்ட் சேவை மையத்தை கே.எச்.முனியப்பா எம்.பி. திறந்து வைத்தார்.

பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு

கோலார் மாவட்டம், கோலார் தங்கவயல் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் பாஸ்போர்ட் பெறுவதற்காக நீண்ட காலமாக பெங்களூருவுக்கு சென்றுவரும் நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் கோலார் தங்கவயலிலேயே பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கோலார் தங்கவயலில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் புதிதாக பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

புதிய ரெயில் பாதை

விழாவுக்கு ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா எம்.பி. பாஸ்போர்ட் சேவை மையத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

கோலார் தங்கவயல் மக்களின் நீண்ட நாள் கனவான மாரிக்குப்பம்-குப்பம் இடையே புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகள் விரைவில் முடிவடையும். மேலும் கோலார் தங்கவயலில் புதிய பாஸ்போர்ட் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கோலார் தங்கவயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இங்கேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு

முன்னதாக ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

கோலார் தங்கவயலில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் தபால் நிலையத்தில் ஏ.டி.எம். மையத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோலார் தங்கவயல் உரிகம் பகுதியில் அமைந்திருக்கும் தபால் நிலையத்தை புதுப்பிக்க என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் நகரசபை தலைவர் ரமேஷ் குமார் ஜெயின் மற்றும் தபால் துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், பாஸ்போர்ட் சேவை மைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story