மீனவர் சங்கத்தினர் போலீசில் புகார் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு
மண்டபத்தில் மீனவர் சங்கத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், மண்டபம் மீனவர் சங்கத்தினர் போலீசில் புகார் செய்தனர். தொடர்ந்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
ராமேசுவரம்,
மண்டபத்தில் மீன்பிடி தொழிலை நம்பி சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்தநிலையில் மண்டபம் கோவில்வாடி பகுதியில் தங்கச்சிமடத்தை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டு அங்கிருந்து ஏராளமான மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
இந்தநிலையில் மண்டபம் கோவில்வாடி கடற்கரை பகுதியை சேர்ந்த தீபகற்ப விசைப்படகு மீனவர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
மண்டபம் துறைமுகத்தில் உள்ள கோவில்வாடி பகுதியில் கடந்த 60 வருடங்களாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றோம். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக மண்டபம் துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வரும் வேறு சங்கத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் எங்களிடம் அடிக்கடி மீன்பிடி தொழில் சம்பந்தமாக பிரச்சினை செய்து வருகின்றனர்.
மேலும் அவர்கள் இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசி கிண்டலடித்து வருவதுடன், அடியாட்களை வைத்து தாக்கவும் முயற்சி செய்து வருகின்றனர். அவர்கள் சாதி, மத, பேதம் இல்லாமல் சகோதரர்களாக பழகி வரும் எங்களுக்கும், மற்ற மீனவர்களுக்கும் பிரச்சினை எற்படுத்தி வருகின்றனர். ஆகவே எங்கள் சங்க மீனவர்களிடம் பிரச்சினை செய்து வரும் நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும், அமைதியாக நாங்கள் மண்டபத்தில் மீன் பிடி தொழில் செய்யவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மேலும் இந்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று (சனிக்கிழமை) தீபகற்ப விசைப்படகு மீனவர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த 300 விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென்று முடிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story