பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் குடியரசு தின விழா இன்று கோலாகலம் மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பெங்களூரு,
பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதில் கவர்னர் வஜூபாய் வாலா தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கவர்னர் தேசிய கொடி ஏற்றுகிறார்
பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் மாநகராட்சி சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல, இன்று (சனிக்கிழமை) மானேக்ஷா மைதானத்தில் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் செய்து வருகின்றனர். இன்று நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளார். இதற்காக காலை 8.55 மணியளவில் விழா நடைபெறும் மேடைக்கு கவர்னர் வருகை தருகிறார்.
பின்னர் காலை 9 மணியளவில் கவர்னர் வஜூபாய் வாலா தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். அப்போது விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வானில் பறந்தபடி தேசிய கொடிக்கு பூக்கள் தூவப்படும். பின்னர் கவர்னர் வஜூபாய் வாலா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வதுடன், குடியரசு தின விழா உரை ஆற்றுகிறார்.
கலை நிகழ்ச்சிகள்
அதைத்தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில். 2,150 மாணவ, மாணவிகள் கலந்துகொள்ள உள்ளனர். இதுதவிர ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. குடியரசு தினவிழாவை காணவரும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களுக்ககாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் விழாவை காணவருபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மைதானத்திற்குள் கேமராக்கள், வாசனை திரவியங்கள், துண்டு பிரசுரங்கள் கொண்டு வர போலீசார் தடை விதித்துள்ளனர்.
குடியரசு தினத்தையொட்டி மானேக்ஷா மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் தொடர்ந்து மைதானத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் 9 துணை போலீஸ் கமிஷனர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் மானேக்ஷா மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றமும், சில சாலைகளில் வாகனங்கள் நிறுத்தவும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
பலத்த பாதுகாப்பு
குடியரசு தினத்தையொட்டி பெங்களூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ரெயில், பஸ் நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் அந்தந்த மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story