கிராமங்களில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை - தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
கிராமங்களில் அடிப்படை வசதிகள் எதுவுமே முறையாக செய்து தரப்பட வில்லை என்று தி.மு.க. ஊராட்சி சபை கூட்டத்தில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.
காரியாபட்டி,
காரியாபட்டி ஒன்றியத்தில் உள்ள கல்லுப்பட்டி, புல்லூர், தொடுவன்பட்டி, கடமங்குளம், உப்பிலிக்குண்டு, அழகியநல்லூர், வரலொட்டி, வலுக்கலொட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தி.மு.க. சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில் திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார்.
காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் தமிழ்வாணன், ஊராட்சி செயலாளர் கீழஉப்பிலிக்குண்டு குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டங்களில் கிராம பொது மக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, சிமெண்டு சாலை, மயான பாதை சீரமைப்பு, சமுதாயக் கூடம், நூலகம், பள்ளிக் கட்டிடம் பராமரிப்பு, கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு மனு கொடுத்தனர்.
புல்லூரில் நடந்த கூட்டத்தில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. பேசியதாவது:-
கிராமங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவுமே முறையாக செய்யப்படவில்லை. வறட்சி காலங்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். போக்குவரத்து வசதிக்காக சாலை பராமரிப்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இது போன்ற அடிப்படை வசதிகள் குறித்து மக்களை நேரில் சந்தித்து கேட்பதற்காகத் தான் தி.மு.க. சார்பாக ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.
பெரும்பாலான மக்கள் குடிநீர், சாலை, போக்குவரத்து வசதி, சுகாதார வளாகங்கள் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு கொடுத்து உள்ளனர். இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர பாடுபடுவேன். காரியாபட்டி ஒன்றியத்தில் அசேபா நிறுவனத்தின் மூலம் கல்லாம்பிரம்பு, புளியம்பட்டி, விட்டிலா ரேந்தல் ஆகிய கிராமங்களில் தொடக்கப்பள்ளிகளை நடத்தி வந்தனர். ஆனால் தற்போது 3 பள்ளிகளையும் மூடிவிட்டனர்.
இந்த பள்ளிகள் சம்பந்தமாக நான் அரசுக்கு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு வருகை தந்து பார்வையிட்டு இந்த 3 பள்ளிகளையும் அரசு எடுத்து நடத்த வேண்டும் என்று அறிக்கை கொடுத்துள்ளது. ஆனால் இது வரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. பேசினார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் செந்தில், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சண்முகக்சாமி, நவநீதன், முன்னாள் யூனியன் துணைத் தலைவர் மணி என்ற ராமநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிதம்பர பாரதி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அரசகுளம் சேகர், குரண்டி முன்னாள் ஊராட்சி தலைவர் சிவசக்தி, கல்லுப்பட்டி இருளன், புல்லூர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story