அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் - மறியலில் ஈடுபட்ட 1,959 பேர் கைது
ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் தொடரும் நிலையில் நேற்று 22.2 சதவீதம் பேர் வேலைக்கு வரவில்லை. மறியலில் ஈடுபட்ட 1,959 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4-வது நாளாக நேற்றும் வேலை நிறுத்தம் தொடர்ந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் வருவாய் துறையில் 167 பெண்கள் உள்பட 365 பேரும், ஊரக வளர்ச்சித்துறையில் 61 பெண்கள் உள்பட 279 பேரும், சத்துணவு அமைப்பாளர்கள் 445 பெண்கள் உள்பட 511 பேரும், அங்கன்வாடி பணியாளர்கள் 5 பெண்களும், இதர துறைகளில் 111 பெண்கள் உள்பட 392 பேரும் ஆக மொத்தம் 789 பெண்கள் உள்பட 1,552 அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். மொத்தமுள்ள அரசு ஊழியர்கள் 16 ஆயிரத்து 362 பேரில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் 9.49 சதவீதம் பேராகும்.
மாவட்டம் முழுவதும் உள்ள மொத்த ஆசிரியர்கள் 10 ஆயிரத்து 779 பேரில் 2,836 பெண்கள் உள்பட 4,489 ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்கள் 41.6 சதவீதம் பேராகும். ஆக மொத்தம் 3,625 பெண்கள் உள்பட 6,041 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றோர் 22.26 சதவீதம் பேராகும். 200 பள்ளிகள் நேற்று செயல்படவில்லை. ஆசிரியர்கள் வராத பெரும்பாலான பள்ளிகளில் பள்ளி கல்வித்துறையினர் மாற்று ஏற்பாடு செய்தனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அலுவலக மாநில செயலாளர் கண்ணன் தலைமையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 1,147 பெண்கள் உள்பட 1,959 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளபடி விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் செயல்பட தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
அரசு உத்தரவிட்டுள்ளபடி ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் சான்றிதழ்களுடன் ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story