தலைவாசல் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகள் கிணற்றில் வீசி கொலை
தலைவாசல் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாயிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தலைவாசல்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் மாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். விவசாயி. இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்று வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரியங்கா காந்தி (வயது 24). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர்.
பிரியங்கா காந்திக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஷிவானி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். அதன்பின்னர் ஒரு குழந்தை பிறந்து 8 மாதங்களில் இறந்து விட்டது. அதன்பிறகு ஒரு மகன் பிறந்தான். அவன் 7 மாதங்களில் இறந்து விட்டான். தற்போது ஷிவானிக்கு 5 வயது ஆகி இருந்தது. ஒரே மகள் என்பதால் பாசத்துடன் வளர்த்து வந்தனர்.
சங்கர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருவதால் பிரியங்கா காந்தி, தனது மகளுடன் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலுப்பநத்தம் கிராமத்தில் உள்ள தனது தந்தை கணேசன் வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பிரியங்கா காந்தி, ஷிவானி ஆகியோர் தலைவாசல் சென்றனர். அங்குள்ள ஒரு பைனான்சில் பிரியங்கா காந்தி தனது நகைகளை அடமானம் வைத்தார். அப்போது அங்கிருந்தவர் கேட்டதற்கு தனது கணவர் சங்கர் நாளை வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வருகிறார். எனவே செலவுக்கு பணம் தேவைப்படுகிறது, இதற்காக நகையை அடமானம் வைத்தேன், என்று கூறியுள்ளார்.
பின்னர் அங்கிருந்து பஸ்சில் இலுப்பநத்தம் கிராமத்திற்கு தாயும், மகளும் இரவில் வந்தனர். பஸ்நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரம் நடந்ததும் ரோட்டு ஓரம் உள்ள விவசாய கிணற்றில் ஷிவானியை தூக்கி பிரியங்கா காந்தி வீசினார். பின்னர் தானும் கிணற்றில் குதித்தார். அந்த கிணறு 60 அடி ஆழம் கொண்டது. 2 பேரும் கிணற்று தண்ணீரில் தத்தளித்தனர். இரவு முழுவதும் தாயும், மகளும் கிணற்றில் தத்தளித்துக்கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் சத்தம் போட்டனர்.
அந்த கிணற்றின் அருகில் அதன் உரிமையாளர் வடிவேலுவின் வீடு உள்ளது. நேற்று காலை 6 மணியளவில் கிணற்றில் இருந்து சத்தம் வந்ததை கேட்ட வடிவேலு அருகில் சென்று பார்த்தார். அப்போது கிணற்றில் பிரியங்கா காந்தி தத்தளித்ததை கண்டு சத்தம் போட்டார். இதை கேட்டதும் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பின்னர் கயிறு கட்டி பிரியங்கா காந்தியை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடல் மீட்பு
பின்னர் சிறுமி ஷிவானியை தேடினர். ஆனால் அவள் கிடைக்கவில்லை. இதுபற்றி ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் தேடினர். அப்போது ஷிவானி கிணற்று தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. அவளது உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதுபற்றி வீரகனூர் போலீசில் இலுப்பநத்தம் கிராம நிர்வாக அலுவலர் முத்தையன் புகார் செய்தார். ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜாரணவீரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிரியங்கா காந்திக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளக்காதல் இருந்து வந்தது. இது ஷிவானிக்கு தெரியவந்தது. தாயின் கள்ளக்காதலுக்கு ஷிவானி இடையூறாக இருந்தாள். இந்தநிலையில் சங்கர் வெளிநாட்டில் இருந்து வருவதால் பிரியங்கா காந்திக்கு பயம் ஏற்பட்டது. கணவரிடம் தனது கள்ளக்காதல் பற்றி மகள் காட்டிக்கொடுத்து விடுவாளோ என்று அச்சம் அடைந்தார். இந்தநிலையில் தலைவாசலில் இருந்து ஊருக்கு வரும் வழியில் மகளை கிணற்றில் வீசி கொன்றாள். பிரியங்கா காந்தி தண்ணீரில் தத்தளித்ததை மறுநாள் அக்கம்பக்கத்தினர் கண்டு மீட்டு விட்டனர்.மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story