தொடர்ந்து 2-வது நாளாக எதிர்ப்பு: 2 மின் கோபுரங்களில் ஏறி ஆண்- பெண் விவசாயிகள் போராட்டம் சென்னிமலை அருகே பரபரப்பு


தொடர்ந்து 2-வது நாளாக எதிர்ப்பு: 2 மின் கோபுரங்களில் ஏறி ஆண்- பெண் விவசாயிகள் போராட்டம் சென்னிமலை அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 26 Jan 2019 4:23 AM IST (Updated: 26 Jan 2019 4:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஆண், பெண் விவசாயிகள் 2 உயர் அழுத்த மின் கோபுரங்கள் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னிமலை,

திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகில் உள்ள ராசிபாளையத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம், பாலவாடி வரை 195 கிலோ மீட்டர் தூரத்திற்கு 400 கிலோ வாட் மின்சாரம் கொண்டு செல்வதற்காக 564 உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 90 சதவீத உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி முடிவடைந்து உள்ளது. ஆனால் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க கூடாது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த இடங்களில் இதற்கான பணிகள் தொடங் கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்படாமல் இருந்த உயர் அழுத்த மின் கோபுரங்களை அமைப்பதற்கு கலெக்டர் சி.கதிரவன் மின் வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட பொக்லைன் எந்திரங்களுடன் மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சென்னிமலை அருகே உள்ள முதலியாக்கவுண்டன்வலசு கிராமத்துக்கு வந்தனர். இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாகுமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கப்பட உள்ள வயலில் படுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டதாக 15 பெண்கள் உள்பட 77 பேரை கைது செய்தனர். மேலும் தங்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மின் வாரிய உதவி செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளோடு போலீசார் மொத்தம் 76 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், தொடர்ந்து 2-வது நாளாக நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதலியாக்கவுண்டன்வலசில் உள்ள குப்பன் என்பவரின் நிலத்தில் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெறும் இடத்துக்கு வந்து கொண்டிருந்தனர். இதுபற்றி அறிந்ததும் அவர்கள் அனைவரையும் அங்குள்ள ரெயில்வே நுழைவு பாலத்துக்கு முன்பாக போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாகுமார், ஈரோடு மின்வாரிய செயற்பொறியாளர் (மின் கம்பிகள் அமைப்பு) அருள்அரசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள், ‘இதுபற்றி முறையாக விவசாயிகளின் வக்கீல்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது பகல் 11 மணி அளவில் முதலியாக்கவுண்டன்வலசு அருகே உள்ள மோளக்கவுண்டன்பாளையத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த ஒரு உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஆண், பெண் விவசாயிகள் ஏறி உட்கார்ந்து கொண்டு போராட்டம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

தகவல் அறிந்ததும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசாரின் ஒரு பகுதியினர் உடனடியாக மோளக்கவுண்டன்பாளையம் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு தங்கவேல் மற்றும் வேலுச்சாமி ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் 150 அடி உயரம் உள்ள மின் கோபுரத்தில் அதே பகுதியை சேர்ந்த ரேவதி (வயது 32), பிரியா (25), சம்பூர்ணம் (25), பழனியம்மாள் (40) ஆகிய 4 பெண்கள் மற்றும் தெய்வசிகாமணி (42), துரைசாமி (51), மோகன்ராஜ் (42) ஆகிய 3 ஆண்கள் என மொத்தம் 7 பேர் ஏறி உட்கார்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

இந்த போராட்டம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க அந்த உயர் அழுத்த மின் கோபுரத்துக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு மின் கோபுரத்தில் 7 ஆண்கள் ஏறி உட்கார்ந்து கொண்டு போராட்டம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அந்த மின் கோபுரம் அமைந்துள்ள பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர்.

இதற்கிடையே இதுபற்றி சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மின் கோபுரங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மதியம் 1 மணி அளவில் ஒரு மின்கோபுரத்தில் ஏறி போராடிக்கொண்டிருந்த 4 பெண்களும், மற்றொரு மின் கோபுரத்தில் இருந்த 3 ஆண்களும் கீழே இறங்கி வர சம்மதித்தனர். இதனால் அவர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர். பின்னர் மாலை மற்றொரு மின் கோபுரத்தில் 7 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Next Story