சேலத்தில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 25 பேர் கைது
சேலத்தில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சேலம்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்றும் மறியல் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து, நேரு கலையரங்கில் அடைத்தனர். மாலை 6 மணி வரை அவர்களை விடுதலை செய்யவில்லை. மாலை 6-30 மணிக்கு மறியலில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் சிலரை கைது செய்து மற்றவர்களை விடுவிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவு வந்ததாக தகவல் பரவியது.
இதையொட்டி கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் கலையரங்கு முன்பு கூடி அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே போன்று கலையரங்கில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தவர்கள், எங்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர்.
ஆனால் இரவு 10 மணி வரை விடுதலை செய்யப்படவில்லை. 10.15 மணிக்கு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், துணை கமிஷனர் தங்கதுரை ஆகியோர் கலையரங்கிற்கு வந்து அனைவரையும் கைது செய்ய தயாராக உள்ளோம். எனவே கைது ஆக விருப்பம் இல்லாதவர்கள் வெளியில் செல்லலாம் என்று கூறினர். அப்போது முக்கிய நிர்வாகிகள் சிலர் நாங்கள் மட்டும் கைதாகி விடுகிறோம். பெண்கள் உள்பட மற்றவர்கள் வெளியில் செல்லுங்கள் என்று கூறினர். இதையொட்டி ஒவ்வொருவராக கலையரங்கை விட்டு வெளியில் வந்தனர்.
அப்போது வெளியில் நின்று கொண்டிருந்த பலர் 2-வது முறையாக அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி திடீரென்று அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையொட்டி போராட்டத்தை கைவிட்டனர். அதன்பிறகு இரவு 11-30 மணி அளவில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாரி, உதயகுமார், முத்துக்குமரன், திரு முருகவேல் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story