வேலூரில் நடந்த குடியரசுதின விழாவில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார் ரூ.4¼ கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது


வேலூரில் நடந்த குடியரசுதின விழாவில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார் ரூ.4¼ கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 27 Jan 2019 4:30 AM IST (Updated: 26 Jan 2019 6:36 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் நடந்த குடியரசுதின விழாவில் கலெக்டர் ராமன் தேசியக்கொடி ஏற்றிவைத்து, ரூ.4¼ கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வேலூர், 

இந்தியாவின் 70–வது குடியரசுதின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசுதின விழாவையொட்டி வேலூரில் கோட்டை முன்பு உள்ள காந்திசிலைக்கு கலெக்டர் ராமன் நேற்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றினார்.

அதைத்தொடர்ந்து வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் நடந்த குடியரசுதின விழாவில் கலெக்டர் ராமன் கலந்து கொண்டு காலை 8 மணிக்கு தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமாதானத்தை வலியுறுத்தி வெண்புறாக்களை பறக்கவிட்டார். அதைத்தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை அவர் பார்வையிட்டார். போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உடனிருந்தார். பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த 81 போலீசாருக்கு முதல்–அமைச்சரின் பதக்கங்களை அவர் வழங்கினார். சுதந்திர போராட்ட தியாகிகள் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்து, இனிப்பு வழங்கினார்.

மேலும் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மைத்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்பட 8 துறைகள் சார்பில் 75 நபர்களுக்கு ரூ.4 கோடியே 24 லட்சத்து 36 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேலூர் ஈ.வெ.ரா. நாகம்மை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தோட்டப்பாளையம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராணிப்பேட்டை வி.ஆர்.வி. மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேலூர் ஹோலிகிராஸ் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராணிப்பேட்டை எல்.எப்.சி. மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேலூர் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ– மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவில் வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், திட்ட இயக்குனர் பெரியசாமி, உதவி கலெக்டர் மெகராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசுதின விழாவில் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேசிய கொடியேற்றினார். கமி‌ஷனர் சிவசுப்பிரமணியன் மற்றும் உதவி கமி‌ஷனர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் கோர்ட்டில் பார்அசோசியேசன் சார்பில் நடந்த விழாவில் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் எம்.பாஸ்கரன், அட்வகேட் அசோசியேசன் துணைத்தலைவர் தினகரன், பொருளாளர் அரிவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி செல்வசுந்தரி தேசிய கொடியேற்றினார்.

மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி பாரி, சார்பு நீதிபதி தாமோதரன், கூடுதல் சார்பு நீதிபதி ராஜசிம்ம வர்மன், மாஜிஸ்திரேட்டுகள் அலீசியா, வெற்றிமாறன், கனகராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி அருண்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.


Next Story