தானத்திற்காக ஒரு பயணம்


தானத்திற்காக ஒரு பயணம்
x
தினத்தந்தி 27 Jan 2019 1:00 PM IST (Updated: 26 Jan 2019 6:56 PM IST)
t-max-icont-min-icon

சிறுநீரகங்களை தானம் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மோட்டார் சைக்கிளில் நாட்டின் பல பகுதிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார், பிரமோத் லட்சுமண் மகாஜன்.

67 வயதாகும் இவர் மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லி மாவட்டத்தில் உள்ள தவாலி கிராமத்தை சேர்ந்தவர். இவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் ராணுவ வீரர் ஒருவருக்கு தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக வழங்கி இருக்கிறார். அதைத்தொடர்ந்து சிறுநீரக தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மேலும் 20 பேரை சிறுநீரக தானம் செய்ய வைத்துவிட்டார். அத்துடன் உடல் உறுப்புகள் தானம் பற்றிய அவசியத்தையும் எடுத்துரைத்து வருகிறார்.

அவருடைய தீவிர முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது. ஆயிரம் பேர் தங்கள் உறுப்புகளை தானம் செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். இறந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக பெற்று இதயம், கண்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்து நிறைய பேருக்கு மறுவாழ்வும் அளித்திருக்கிறார். ஒரு சிறுநீரகத்தை தானம் செய்த பின்பும் முதிய வயதிலும் தான் ஆரோக்கியமாக இருப்பதை சுட்டிக்காட்டி அவர் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.

‘‘மூத்த ராணுவ வீரர் பாலு காப்ளேயின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து போனது. அவருக்கு அவசரமாக மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டியிருந்தது. அவருக்கு சிறுநீரக தானம் செய்வதற்கு சிலர் முன்வந்தார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களின் ரத்த வகை பொருந்தவில்லை. அவரது ரத்த வகையும், என் ரத்த வகையும் பொருந்தி போனதால் ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க உடனே சம்மதித்தேன். அவரை போன்று, ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு உதவி செய்ய தொடங்கினேன். அதற்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது’’ என்கிறார்.

மகாஜன் தற்போது மோட்டார் சைக்கிளில் உடல் உறுப்புகள் தானம் பற்றிய விழிப்புணர்வு வாசகத்துடன் நாடு முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Next Story