போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து பள்ளிகள் செயல்பட நடவடிக்கை கலெக்டர் ராமன் உத்தரவு


போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து பள்ளிகள் செயல்பட நடவடிக்கை கலெக்டர் ராமன் உத்தரவு
x
தினத்தந்தி 26 Jan 2019 10:30 PM GMT (Updated: 26 Jan 2019 1:56 PM GMT)

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களை காலி பணியிடங்களாக கருதி அந்த இடத்திற்கு தற்காலிக ஆசிரியர்களை நியமித்து 28–ந் தேதி வழக்கம்போல பள்ளிகள் செயல்பட நடவடிக்கை எடுக்க கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர், 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–

22–ந் தேதி முதல் ஜாக்டோ– ஜியோ நடத்தும் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், மாணவர்கள் நலன்கருதி 25–ந் தேதிக்குள் பணிக்கு திரும்பவேண்டும் என சென்னை ஐகோர்ட்டு இடைக்கால ஆணை வழங்கி உள்ளது.

ஆனால் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் 25–ந் தேதி (நேற்று) மாலை 6 மணிவரை பணிக்கு திரும்பவில்லை. மேலும் மீண்டும் ஒரு வாய்ப்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவின்படி 26–ந் தேதி (இன்று) காலை 10 மணிக்குள் பணிக்கு திரும்பும் பணியாளர்கள் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன்பிறகும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஆசிரியர்களின் பணியிடம், காலிப்பணியிடம் என கருதி அந்தந்த பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதியான ஆசிரியர்களை மாதம் ரூ.10 ஆயிரம் என்ற தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக, மாணவர் நலன்கருதி நியமனம் செய்ய தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் இந்த நியமனத்தை மேற்கொண்டு 28–ந் தேதி அன்று வழக்கம்போல் பள்ளிகள் செயல்பட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டதற்கான தொகுப்பூதியம் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.

இடைநிலை ஆசிரியர் பணிக்கு டி.டி.எட் முடித்து, டெட் முதல்தாள் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பட்டப்படிப்புடன் பி.எட் முடித்து, டெட் 2–ம்தாள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.

முதுகலை ஆசிரியர் பணிக்கு முதுகலை பட்டப்படிப்புடன் பி.எட். முடித்திருக்க வேண்டும். ஓய்வுபெற்ற முதுகலை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்கள் அறிய சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story