குடியரசு தின விழா கொண்டாட்டம் கிருஷ்ணகிரியில் கலெக்டர் பிரபாகர் தேசிய கொடியை ஏற்றினார்


குடியரசு தின விழா கொண்டாட்டம் கிருஷ்ணகிரியில் கலெக்டர் பிரபாகர் தேசிய கொடியை ஏற்றினார்
x
தினத்தந்தி 26 Jan 2019 11:00 PM GMT (Updated: 26 Jan 2019 3:59 PM GMT)

கிருஷ்ணகிரியில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் பிரபாகர் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 70 -வது குடியரசு தின விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல்படை, நாட்டு நலப் பணிதிட்டம், தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து 34 சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கலெக்டர் பிரபாகர், பொன்னாடை அணிவித்து நினைவு பரிசை வழங்கினார். பின்னர் தமிழக முதல்வரின் காவலர் பதக்கத்தை 42 காவலர்களுக்கு கலெக்டர் வழங்கினார். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறை, வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட சமூக நலத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 470 பேருக்கு ரூ.2 கோடியே 34 லட்சத்து 74 ஆயிரத்து 117 மதிப்புள்ள அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து அரசு பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவத்துறை, வருவாய்த்துறை, கால்நடைபராமரிப்புத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு, நூலகத்துறை, நகராட்சித்துறை, கருவூல கணக்குத்துறை, அவரசஊர்தி துறை, மாவட்ட விளையாட்டுத்துறை என மொத்தம் 137 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, டி.கே.சாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டான்பாஸ்கோ மெட்ரிக் பள்ளி, டிரினிட்டி மெட்ரிக் பள்ளி, கேம்பிட்ஜ் மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த 980 மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளிகளுக்கு கலெக்டர் நினைவு பரிசு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ், பர்கூர் சி.வி.ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, உதவி கலெக்டர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமமூர்த்தி, மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி. மகேஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story