நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தி.மு.க.வினர் பாடுபட வேண்டும் தர்மபுரி பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தி.மு.க.வினர் பாடுபட வேண்டும் தர்மபுரி பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா பேச்சு
x
தினத்தந்தி 27 Jan 2019 4:15 AM IST (Updated: 26 Jan 2019 9:36 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற தி.மு.க.வினர் பாடுபட வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் ஆ.ராசா பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட தி.மு.க. மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் தர்மபுரி வள்ளலார் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தங்கராஜ் வரவேற்று பேசினார். மாணவரணி துணை அமைப்பாளர்கள் முல்லைவேந்தன், முத்துக்குமார், இளவரசு, நடேசன், மணிவண்ணன், மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. கொள்கைபரப்பு செயலாளருமான ஆ.ராசா, மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ., தலைமைக்கழக பேச்சாளர் அத்திப்பட்டு சாம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பேசியதாவது:- விஞ்ஞானம் பெரிய வளர்ச்சி பெற்ற இந்த காலத்திலும் சாதி பாகுபாடு உள்ளது. தனித்தனி மயானங்கள் உள்ளன. இத்தகைய பாகுபாடுகளை கடந்து தமிழகத்தில் மொழிப்போர் நடைபெற்றது. இந்திமொழி எப்போதெல்லாம் தமிழகத்தில் திணிக்கப்பட்டதோ அப்போது அதை எதிர்த்து போராடி தி.மு.க.வினர் சிறை சென்றனர். சாதி, மத பாகுபாடுகளை கடந்து மக்களை ஒருங்கிணைக்கும் வலிமை மொழிக்கு உள்ளது. உலகத்திற்கே சமத்துவத்தை போதித்தது தமிழ்மொழி.

உலகத்தில் தத்துவ ஞானிகள், மேதைகள், செல்வந்தர்கள் தங்கள் தாய்மொழிக்கு செய்யமுடியாத சிறப்பை தமிழ்மொழிக்கு ஏற்படுத்தியவர் கருணாநிதி. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று கொடுத்ததன் மூலம் இந்த மொழியின் சிறப்பை அவர் உலகறிய செய்தார். மத்தியிலும், தமிழகத்திலும் தற்போது மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. இதை வீழ்த்த வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான அணி வெற்றிபெற தி.மு.க.வினர் அயராது பாடுபட வேண்டும்.

இவ்வாறு ஆ.ராசா பேசினார்.

இந்த கூட்டத்தில் பி.என்.பி.இன்பசேகரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி.தாமரைச்செல்வன், மாநில நிர்வாகிகள் கீரை விசுவநாதன், ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் மாதையன், மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் முரளி, ஒன்றிய செயலாளர்கள் சேட்டு, சண்முகம் உள்பட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

Next Story