நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 300 தொகுதிகளை கைப்பற்றும் பொதுச்செயலாளர் சஞ்சய் தத் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 300 தொகுதிகளை கைப்பற்றும் பொதுச்செயலாளர் சஞ்சய் தத் பேட்டி
x
தினத்தந்தி 27 Jan 2019 3:45 AM IST (Updated: 26 Jan 2019 10:02 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 300 தொகுதிகளை கைப்பற்றும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சஞ்சய் தத் கூறினார்.

கூடலூர்,

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மற்றும் கட்சியில் நேரடியாக இணைவதற்கான சக்தி திட்ட அறிமுக நிகழ்ச்சி கூடலூரில் தனியார் மண்டபத்தில் நேற்று மதியம் 12 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊட்டி எம்.எல்.ஏ. கணேஷ் தலைமை தாங்கினார். மாநில கமிட்டி உறுப்பினர்கள் கோஷிபேபி, கே.பி.முகமது, அனஸ்எடாலத், நகர தலைவர் அப்துப்பா, வட்டார தலைவர் அஷ்ரப், மாவட்ட துணை தலைவர்கள் சையது முகமது, அம்சா, குஞ்சாபி, தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான சஞ்சய் தத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது. மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். காந்தி, நேரு, அம்பேத்கார் உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மாற்ற நினைக்கிறது. காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ளது. இதனால் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற பாடுபட வேண்டும். கட்சி தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றவுடன் புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தலைவர் தொண்டர்கள் இடையே பாலமாக இருக்க சக்தி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். இத்திட்டத்தின்படி கட்சியில் புதிய உறுப்பினர்களை நேரடியாக சேர்க்க முடியும்.

அதிக உறுப்பினர்களை சேர்க்கும் கட்சியினர் 10 பேருக்கு ராகுல்காந்தி பாராட்டு சான்றிதழ்கள் வழங்க உள்ளார். மேலும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலை காங்கிரசார் எதிர் கொள்ள தயாராக வேண்டும். மோடி அரசின் தோல்விகள், ஊழல்கள் குறித்து மக்களிடம் தெரிவித்து ஆதரவு திரட்ட வேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. ரபேல் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளது என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி வருகிறார். மேலும் பாராளுமன்றத்தில் 3 கேள்விகளை எழுப்பி பேசினார். ஆனால் இதுவரை பிரதமர் நரேந்திரமோடியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. கூடலூர் நிலப்பிரச்சினை குறித்து ராகுல்காந்தியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் நிலப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். எனவே காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் வாக்குச்சாவடி முகவர்கள் கட்சி பணியாற்றுவது குறித்து விளக்கினார். முடிவில் நகர துணை தலைவர் சுல்பீக்கர் அலி நன்றி கூறினார்.

கூட்டத்துக்கு முன்னதாக சஞ்சய் தத் நிருபர்களிடம் கூறியதாவது:-

மின்னணு வாக்கு எந்திரங்கள் குறித்து மக்களின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளித்து, அவர்களின் மனதில் நம்பிக்கையை தேர்தல் கமிஷன் ஏற்படுத்த வேண்டும். பா.ஜனதா ஆட்சியில் மக்கள் நிம்மதியை இழந்து வாழ்கின்றனர். இந்த நிலை எப்போது மாறும் என்ற மனநிலையில் உள்ளனர். தேர்தல் கருத்து கணிப்புகள் குறித்து வரும் தகவல்கள் பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 300 தொகுதிகளை கைப்பற்றும். கூடலூர் பகுதியில் ஜென்மம் நிலங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் தமிழக அரசு அவற்றை நேரடியாக வனமாக மாற்றி வருகிறது. மக்களுக்கான ஆட்சி தமிழகத்தில் நடை பெறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story