குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
குடியரசு தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடந்தது.
ஆனைமலை,
உள்ளாட்சி விதிகளின்படி ஜனவரி 26-ந் தேதி (குடியரசு தினம்), மே 1-ந் தேதி (தொழிலாளர் தினம்), ஆகஸ்ட் 15-ந் தேதி (சுதந்திர தினம்), அக்டோபர் 2-ந் தேதி (காந்தி ஜெயந்தி) என ஆண்டுக்கு 4 நாட்கள் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இதில் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி பணிகள் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட வேண்டும்.
இதில் ஊராட்சியின் வரவு செலவு கணக்கை பொதுமக்கள் முன்னிலையில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களும் பெறப்படும்.
அதன்படி குடியரசு தினமான நேற்று ஆனைமலை ஒன்றியத்துக்குட்பட்ட 19 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி அலுவலகம் முன்பும், ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சமூக நலக்கூடம் ஆகியவற்றில் இக்கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சிகள் தோறும் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம சபை கூட்டங்களை கண்காணித்தனர். ஆனைமலை ஒன்றியத்திலுள்ள 19 ஊராட்சிகளிலும் ஊராட்சி செயலர்கள் தலைமையில் நேற்று கிராம சபை கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.
இதில் ஆயிரத்து 476 ஆண்கள், ஆயிரத்து 978 பெண்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 474 பேர் கலந்துகொண்டனர். பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 19 ஊராட்சிகளிலும் சேர்த்து மொத்தம் 266 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டம்பட்டி, அரசம்பாளையம், சொலவம்பாளையம், வடபுதூர், முள்ளுப்பாடி, சொக்கனூர், கோடங்கிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், கோவில்பாளையம், சூலக்கல் உள்ளிட்ட 34 ஊராட்சிகளில் கிராமசபைகூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த 39 கிராமஊராட்சிகளில் காலை 11 மணிக்குகிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அந்தந்த கிராம ஊராட்சிகளுக்கு நியமிக்கப்பட்ட பற்றாளர்கள் முன்னிலை வகித்தனர். இதில் 5473 பேர் கலந்து கொண்டனர். மொத்தம் 670 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சிகள்) பாக்கியலட்சுமி மேற்பார்வையிட்டார்.
தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த 26 கிராமஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் 4058 பேர் கலந்து கொண்டனர். 440 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய ஆணையாளர் சந்திரகுமார், வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சிகள்) சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
கூட்டத்தில், கிராம ஊராட்சிகளில் பொது நிதியில் குடிநீர், மின்சாரம், இதர நிர்வாக செலவின விவரங்கள் படித்து காண்பித்து ஒப்புதல் பெறப்பட்டது. 2019- 20-ம் நிதியாண்டில் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட இருக்கும் ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கான திட்ட அறிக்கை ஒப்புதல் பெறப்பட்டது.
மேலும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
பிளாஸ்டிக் பொருள்கள் இல்லாத மாநிலமாக உருவாகும் வகையில் வணிக நிறுவனங்கள், அனைத்து கடைகள் ஒத்துழைக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
Related Tags :
Next Story