கோவை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் கலெக்டர் ஹரிகரன் தேசிய கொடி ஏற்றினார்


கோவை வ.உ.சி. மைதானத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் கலெக்டர் ஹரிகரன் தேசிய கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 26 Jan 2019 11:15 PM GMT (Updated: 26 Jan 2019 4:44 PM GMT)

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் ஹரிகரன் தேசிய கொடி ஏற்றினார்.

கோவை,

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை வ.உ.சி. பூங்கா மைதானத்தில் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், கலெக்டர் ஹரிகரன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து, போலீசார், தீயணைப்பு துறையினர், ஊர்க்காவல்படை, தேசிய மாணவர் படை, செஞ்சிலுவை சங்கம், சாலை பாதுகாப்பு பிரிவு ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார்.

பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். அவர்க ளுக்கு நினைவுபரிசு வழங்கப்பட்டது. கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 138 போலீசாருக்கு பதக்கத்தை கலெக்டர் வழங்கினார்.

இதையடுத்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பள்ளி கல்வித்துறை, மருத்துவ துறை, சித்த மருத்துவ துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறைகளில் சிறப்பாக பணியாற்றிய 73 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் எஸ்.செல்வகுமாருக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது.மேலும் பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, வேளாண்மை துறை, வருவாய் துறை உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில் 126 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சத்து 11 ஆயிரத்து 980 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஹரிகரன் வழங்கினார்.

அதை தொடர்ந்து, பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 699 மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கலெக்டர் ஹரிகரன் பாராட்டி பரிசு வழங்கினார்.

விழாவில் மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், சப்-கலெக்டர் கார்மேகம் உள்பட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

குடியரசு தின விழாவையொட்டி வ.உ.சி. மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story