தற்காலிக பணி கேட்டு முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் திரண்ட பட்டதாரி ஆசிரியர்கள் 6 இடங்களில் இன்று விண்ணப்பிக்க உத்தரவு
தற்காலிக ஆசிரியர் பணி கேட்டு முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் திரண்டனர். எனவே அவர்களை 6 கல்வி மாவட்ட அலுவலகங்களில் இன்று விண்ணப்பிக்க அதிகாரி உத்தரவிட்டார்.
விழுப்புரம்,
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் நலனை கருதி ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. எனினும் ஆசிரியர்கள், பணிக்கு திரும்பாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும்படி அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் தற்காலிக ஆசிரியர் பணி கேட்டு வேலையில்லா பட்டதாரிகள் பலர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வித்துறை அலுவலகங்களில் குவிந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்றும் 2-வது நாளாக விழுப்புரத்தில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்திற்கு தற்காலிக ஆசிரியர் பணி கேட்டு பட்டதாரி ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் 2-ம் நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள், பி.எட். முடித்தவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.
இவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்களுடன் காத்திருந்தனர். அவர்களிடம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், நாளை (இன்று) அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு சென்று கல்வி சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கும்படி அறிவுரை வழங்கி அவர்களை அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், தற்காலிக ஆசிரியர் பணி கேட்டு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நாளை அதாவது இன்று (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, செஞ்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 6 கல்வி மாவட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இதற்காக கல்வி மாவட்ட அலுவலகங்களில் பணியாளர் ஒருவரை பணியில் அமர்த்தி விண்ணப்பங்கள் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் திங்கட்கிழமையன்று கல்வி மாவட்ட அலுவலகங்களில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து, பள்ளிகளில் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story