நாமக்கல்லில் குடியரசு தினவிழா: ரூ.1.42 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்
நாமக்கல்லில் நேற்று நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் ஆசியா மரியம் 172 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் ஆசியா மரியம் தேசியக்கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கலெக்டர், வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் வானில் பறக்கவிட்டார். பின்னர் குடியரசு தினவிழாவில் பங்கேற்ற தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து, ரோஜாபூக்கள் வழங்கி மரியாதை செலுத்தினார். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அதைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய 49 போலீசாருக்கு தமிழக முதல்–அமைச்சரின் காவலர் பதக்கங்களையும், 17 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 169 அரசு துறை அலுவலர்களுக்கு அவர்களது பணியினை பாராட்டி நற்சான்றிதழ்களையும் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
பின்னர் 172 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 42 லட்சத்து 96 ஆயிரத்து 330 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
விழாவையொட்டி திருச்செங்கோடு எம்.டி.வி. மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுச்சத்திரம் ஆர்.ஜி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மோகனூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சின்ன முதலைப்பட்டி சுரபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை என 9 பள்ளிகளை சேர்ந்த 783 மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சியும், காவல்துறை மோப்பநாய் பிரிவின் நாய்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிறைவாக குடியரசு தினவிழாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்திய பள்ளிகளுக்கு கேடயமும், பள்ளிக்குழந்தைகளுக்கு பரிசுகளையும் கலெக்டர் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, நாமக்கல் சப்–கலெக்டர் கிராந்திகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் பர்ஹத்பேகம், முதன்மைக்கல்வி அலுவலர் உஷா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், தியாகிகள், தியாகிகளின் வாரிசுதாரர்கள், பயனாளிகள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.