பள்ளிபாளையம் அருகே முதுகலை பட்டதாரி பெண் கிணற்றில் குதித்து தற்கொலை போலீசார் விசாரணை
பள்ளிபாளையம் அருகே, முதுகலை பட்டதாரி பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம்,
பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எலந்தகுட்டை கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயராஜ், விவசாயி. இவரது மகள் அம்பிகாவுக்கும் (வயது 24), பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த முத்துராஜ் (27) என்பவருக்கும் கடந்த 2016–ல் திருமணம் நடந்தது.
கடந்த ஆண்டு பிரசவத்திற்காக அம்பிகா எலந்தகுட்டை வந்தார். 6 மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் உடல்நிலை சரியில்லாததால் மேலும் சில மாதம் அம்பிகா பெற்றோர் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் முதுகலை பட்டதாரியான அம்பிகா மேற்கொண்டு எம்.பில். படிக்க சேர்ந்துள்ளார். இதற்காக தன்னுடைய சான்றிதழ்களை கொண்டு வருமாறு கணவர் முத்துராஜிடம் கூறியுள்ளார்.
இதன்பேரில் சில நாட்களுக்கு முன்பு முத்துராஜ் எலந்தகுட்டை வந்தார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் முத்துராஜ் சென்று விட்டார். இதனால் மனம் வருத்தம் அடைந்து காணப்பட்ட அம்பிகா கடந்த 24–ந் தேதி மாலை வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அம்பிகாவின் தந்தை ஜெயராஜ் அவரை பல இடங்களில் தேடினார்.
இந்நிலையில் நேற்று காலை எலந்தகுட்டையில் உள்ள ஒரு கிணற்றில் அம்பிகா பிணமாக மிதந்தார். அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையறிந்த அம்பிகாவின் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி ஜெயராஜ் பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பிகா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.