திருமங்கலம் அருகே கோவில் திருவிழாவில் பிரியாணி விருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி கோவில் திருவிழாவில் ஏராளமான ஆடு, கோழிகள் பலியிடப்பட்டு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
திருமங்கலம்,
மதுரை மாவட்டம் கள்ளிக்குடியை அடுத்துள்ளது, வடக்கம்பட்டி. இந்த கிராமத்தில் முனியாண்டி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்காக உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழாவில் முக்கிய அம்சமாக நள்ளிரவில் ஆடு, கோழிகள் பலியிடப்பட்டு, பிரியாணியுடன் கறிவிருந்து விடிய, விடிய நடைபெறும்.
இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 2 தினங்களாக நடைபெற்றது. முன்னதாக வடக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பழத்தட்டு, பூத்தட்டு, மாலைகள் எடுத்து வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்களுடன், ஆடி, பாடியபடி அவர்கள் கோவிலை வந்தடைந்தனர். மேலும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் ஆடு, சேவல்களை கொண்டு வந்தனர்.
பக்தர்கள் கொண்டு வந்த பூத்தட்டு, பழத்தட்டு, மாலைகளை பூசாரிகள் பெற்று கொண்டனர். பின்னர் இரவு முழுவதும் முனியாண்டி சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையே நள்ளிரவில் நேர்த்திக்கடனாக கொண்டு வரப்பட்ட 150 ஆடுகள், 500 சேவல்கள் முனியாண்டி சாமி கோவில் முன்பு பலியிடப்பட்டன.
பின்னர் வெட்டப்பட்ட ஆடு, சேவல்களை கொண்டு பிரியாணி சமைக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலையில் சிறப்பு பூஜை நடத்தி பக்தர்களுக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. பக்தர்கள் வரிசையில் காத்திருந்து பிரியாணி வாங்கிச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.