விருதுநகரில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகள் கோர்ட்டில் ஆஜர் 8–ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவு


விருதுநகரில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகள் கோர்ட்டில் ஆஜர் 8–ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவு
x
தினத்தந்தி 27 Jan 2019 4:00 AM IST (Updated: 27 Jan 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை 8–ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

விருதுநகர், 

ஜாக்டோ–ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22–ந்தேதி முதல் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். 4–வது நாளாக நேற்று முன்தினம் வேலை நிறுத்தத்தை தொடர்ந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலிலும் ஈடுபட்டனர்.

இதில் மறியலில் ஈடுபட்டதாக 1,959 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் மாலை ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகளை போலீசார் கைது செய்யப்போவதாக தெரிவித்தவுடன் மற்றவர்கள் திருமண மண்டபத்தை விட்டு வெளியேற மறுத்து நள்ளிரவு வரை அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜாக்டோ–ஜியோ நிர்வாகிகள் 35 பேர் தவிர மற்றவர்கள் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினர். வருவாய்துறை அலுவலர், மாநில செயலாளர் கண்ணன், மாவட்ட தலைவர் ராமநாதன் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 35 பேரும் நேற்று விருதுநகர் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி வருகிற (அடுத்த மாதம்) 8–ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.


Next Story