கோவில்பட்டி அருகே சமையல் செய்தபோது தீக்காயம் அடைந்த பெண் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


கோவில்பட்டி அருகே சமையல் செய்தபோது தீக்காயம் அடைந்த பெண் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 Jan 2019 3:30 AM IST (Updated: 27 Jan 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்ததில் தீக்காயம் அடைந்த பெண் உயிரிழந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி, 

சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்ததில் தீக்காயம் அடைந்த பெண் உயிரிழந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணுவ வீரர்

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 41). இவர் உத்தரபிரதேச மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெயா (39). இவர்களுக்கு கண்ணன் (8) என்ற மகன் உள்ளார். கடந்த 21-11-2018 அன்று மதியம் ஜெயா தனது வீட்டில் கியாஸ் அடுப்பில் சமையல் செய்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது.

இதில் காயம் அடைந்த அவருக்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து ஜெயாவின் உடல்நிலை மோசம் அடைந்தததால், அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உறவினர்கள் போராட்டம்

இதற்கிடையே அவருக்கு தனியார் ஆஸ்பத்திரி மற்றும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, அவரது உடலை வாங்க மறுத்து, அவருடைய கணவர் மற்றும் உறவினர்கள், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரேசன், மாநில வக்கீல் அணி துணை செயலாளர் பெஞ்சமின் பிராங்ளின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உடலை வாங்க மறுப்பு

அவர்களிடம், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் மற்றும் மேற்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆஸ்பத்திரிகள் மீது எழுத்துப்பூர்வமாக புகார் தந்தால், உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மூலம் ஜெயாவின் உடலை பரிசோதனை செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி தொடர்ந்து கணவர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று அவருடைய உடல் பரிசோதனை செய்யப்படாமல் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Next Story