சங்கரன்கோவில் அருகே கோவில்களில் கொள்ளையடித்த 3 பேர் கைது 13 பவுன் நகை-பணம் மீட்பு


சங்கரன்கோவில் அருகே கோவில்களில் கொள்ளையடித்த 3 பேர் கைது 13 பவுன் நகை-பணம் மீட்பு
x
தினத்தந்தி 27 Jan 2019 3:00 AM IST (Updated: 27 Jan 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே கோவில்களில் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 13 பவுன் நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் அருகே கோவில்களில் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 13 பவுன் நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது.

கோவில்களில் கொள்ளை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பிள்ளையார்குளத்தில் வடபத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. அதேபோல் பாறைப்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள், நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கரிவலம்வந்தநல்லூர் பந்தப்புளி ரெயில்வே கேட் அருகே கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரகலா மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

நகை-பணம் மீட்பு

விசாரணையில், திருவாரூர் மாவட்டம் திருகுவளை அருகே உள்ள தொழுதூர் கிராமத்தை சேர்ந்த பாலையா மகன் மாரியப்பன் என்ற சுரேஷ் (வயது 24), வேதாரண்யம் தாலுகா கலைஞாயிறு கிராமத்தை சேர்ந்த அன்புசெல்வன் மகன் பாலசிங்கம் என்ற விஜயன் (24), திருவாரூர் அருகே உள்ள மீரான்மலை கிராமத்தை சேர்ந்த ஜான் பிராட்மன் மகன் ரூபன்ராஜ் என்ற அரவிந்தன் (24) என்பதும், அவர்கள் வடபத்திரகாளியம்மன், மாரியம்மன் கோவில்களில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

சுரேசின் உறவினர் பாறைப்பட்டி கிராமத்தில் வசிப்பதும், அவரை பார்க்க வந்த இடத்தில் கோவில்களில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று நோட்டமிட்டு, பின்னர் திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 13 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு டி.வி. ஆகியவற்றை மீட்டனர். கைது செய்யப்பட்ட சுரேஷ் மீது திருவாரூர் மாவட்டத்தில் 9 கொள்ளை வழக்குகளும், விஜயன், அரவிந்தன் ஆகியோர் மீது 2 கொள்ளை வழக்குகளும் நிலுவையில் உள்ளது.

Next Story