மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் பதிவாளர் தகவல்


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் பதிவாளர் தகவல்
x
தினத்தந்தி 27 Jan 2019 3:15 AM IST (Updated: 27 Jan 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது என பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்தார்.

பேட்டை, 

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது என பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புரிந்துணர்வு ஒப்பந்தம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும், புதுடெல்லியில் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவும் இணைந்து இளம் தொழில்முனைவோர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்கலைக்கழக வளாகத்தில் கையெழுத்திடப்பட்டது. இதற்காக கால்நடை வளர்ப்பு துறையின் வசம் இருந்த 546.98 ஏக்கர் நிலம், துணைவேந்தரின் தொடர் முயற்சியால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பெயரில் ரூ.11 கோடி செலவில் நிரந்தர பட்டா பெறப்பட்டு அதில் இருந்து மூன்று ஏக்கர் நிலத்தில் இந்த தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படுகிறது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர், பதிவாளர் சந்தோஷ் பாபு மற்றும் மூத்த நிதி அதிகாரி தேவேகார வெங்கண்ணா ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

வேலைவாய்ப்பு உருவாகும்

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா விரைவில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கட்டமைப்பு, கணினி மென்பொருள் மற்றும் பல்வேறு கணினி சார்ந்த தொழில்சார் சேவைகள், மென்பொருள் ஏற்றுமதி சேவைகள் செயல்படுத்தப்படுகின்றன. பல்கலைக்கழக மாணவர்கள் மென்பொருள் உருவாக்கம் மற்றும் பயிற்சியை எளிதாக பெற முடியும். மேலும் புதிய மென்பொருள் நிறுவனம் பல்கலைக்கழக வளாகத்தில் தொடரவும், அதன் மூலம் பல்கலைக்கழகம் மற்றும் சுற்றியுள்ள பகுதி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

இந்த ஒப்பந்தமானது நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் வசிக்கும் மாணவர்களின் மேம்பாட்டுக்காக 30 வருடத்துக்கு 3 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை இளம் தொழில் முனைவோர் மற்றும் உலக அளவில் உள்ள நிறுவனம் மற்றும் மாணவர்கள் தங்களது சொந்த நிறுவனம் தொடர இந்த மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவை பயன்படுத்திக் கொள்ளலாம் என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story