தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சிறந்த அலுவலர்-ஊழியர்களுக்கு விருது
குடியரசு தினவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சிறந்த அலுவலர்-ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
தூத்துக்குடி,
குடியரசு தினவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சிறந்த அலுவலர்-ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
குடியரசு தினவிழா
இந்திய நாட்டின் 70-வது குடியரசு தின விழா, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காலை 8 மணிக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது. துறைமுக பொறுப்பு கழக தலைவர் ராமசந்திரன் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை, துறைமுக தீயணைப்புப் படை, துறைமுகப் பள்ளியின் தேசிய மாணவ, மாணவிகள் படை மற்றும் துறைமுகப் பள்ளி மாணவ, மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத் தலைவர் ராமசந்திரன் பேசியதாவது:- உலகரங்கில் கப்பல்துறை 2019 ஆண்டு பெரும் சவால்களை சந்தித்த போதிலும் மத்திய கப்பல்துறை அமைச்சகத்தின் வழிநடத்துதலின்படி இந்திய கப்பல்துறையினை வளர்ச்சி பாதையை நோக்கி ‘சாகர்மாலா’ மூலமாக துறைமுகம் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் வகையில் துறைமுகத்தின் கப்பல்கள் உள்ளே வரும் வழிதடத்தினை 17.20 மீட்டராகவும், கப்பல் தளப்பகுதியினை 16.50 மீட்டராகவும் ஆழப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்த உள்ளது. தற்போதுள்ள கப்பல் நுழைவு வாயிலை விரிவுப்படுத்தும் பணி மற்றும் கப்பல்தளங்களை பலப்படுத்தும் பணி செயல்படுத்தபட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விருதுகள்
அதன் பின்னர் துறைமுக பொறுப்பு கழக தலைவர், துறைமுகத்தில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள், ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
அதன் பின்னர் 2017-2018-ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட துறைமுக உபயோகிப்பாளர்களுக்கு, கப்பல் முகவர்கள், சுங்கதுறை சங்கம், சரக்குபெட்டகம் இயக்குபவர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இறுதியாக, துறைமுக பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Related Tags :
Next Story