உடுமலையில் பெயிண்டர் அடித்துக்கொலை; தம்பதி கைது உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் சாலைமறியல்


உடுமலையில் பெயிண்டர் அடித்துக்கொலை; தம்பதி கைது உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 27 Jan 2019 4:30 AM IST (Updated: 27 Jan 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையில் பெயிண்டரை அடித்துக்கொலை செய்ததாக கணவன்- மனைவி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

உடுமலை,

உடுமலையில் பெயிண்டரை அடித்துக்கொலை செய்ததாக கணவன்- மனைவி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதே சமயம் கொலையானவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு கோவைக்கு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வீரபாண்டியன். இவர் தற்போது உடுமலையை அடுத்துள்ள கண்டியகவுண்டன் புதூரில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார். இவருடைய மகன் முருகவேல் (வயது 25). இவர் கண்டியகவுண்டன் புதூரில் தனது நண்பர்கள் வீட்டில் தங்கி இருந்து, பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் முருகவேலுக்கு, கண்டியகவுண்டன் புதூரைச்சேர்ந்த கருப்புசாமி என்பவரின் மகளுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

முதலில் நண்பர்களாக பழகிய இவர்கள், நாளடைவில் ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கினார்கள். கடந்த 5 வருடங்களாக இவர்களின் காதல் நீடித்து வந்துள்ளது. ஆனால், முருகவேல் குடிப்பழக்கம் உடையவராகவும், கெட்ட நண்பர்களுடன் பழகி வந்ததாலும் பெண்ணின் தந்தை கருப்புசாமி, தனது மகளை முருகவேலுக்கு திருமணம் செய்துவைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் கருப்புசாமி தனது மகளை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காங்கேயத்தை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கருப்புசாமியின் மகள் தனது கணவருடன் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதுபற்றிய தகவல் அறிந்த முருகவேல், நேற்று முன்தினம் இரவு கருப்புசாமியின் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் பெண்ணின் தந்தையான கருப்புசாமியிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், ‘உங்கள் மகளை ஏன் எனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்று கேட்டு தொடர்ந்து வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது கருப்புசாமி திடீரென முருகவேலை இறுக்கமாக பிடித்து வைத்து கொண்டார். ஆத்திரத்தில் இருந்த கருப்புசாமியின் மனைவி தெய்வானை அருகில் கிடந்த இரும்பு குழாயை எடுத்து, முருகவேலின் தலையில் அடித்துள்ளார்.

இதில் முருகவேலின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் முருகவேல் மயங்கி கீழே விழுந்தார். இது குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் முருகவேலின் உறவினர்கள், அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், முருகவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து முருகவேலின் உறவினர்கள் உடுமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் விசாரணை நடத்தி கருப்புசாமி(45) மற்றும் அவருடைய மனைவி தெய்வானை (42) ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.

இதற்கிடையில் உடுமலை அரசு ஆஸ்பத்திரியின் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டிருந்த முருகவேலின் உடலை, கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் உடுமலை அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் மேற்கொண்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடுமலை அரசு ஆஸ்பத்திரியிலேயே பிரேத பரிசோதனையை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், முருகவேலின் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு கூடினார்கள்.

அவர்கள் திடீரென உடுமலை-பொள்ளாச்சி ரோடு வ.உ.சி. வீதி சந்திப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து முருகவேலின் உடல் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Next Story