திருப்பூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்


திருப்பூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க குவிந்த பட்டதாரிகள்
x
தினத்தந்தி 27 Jan 2019 4:15 AM IST (Updated: 27 Jan 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகள் குவிந்தனர்.

திருப்பூர்,

ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள் கடந்த 22-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மாவட்டத்தில் பெரும்பாலான தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. பல பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களை கொண்டு பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டது. பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்து இருந்தது.

இந்த நிலையில் மூடிக்கிடக்கும் பள்ளிகளை திறந்து வகுப்புகள் நடத்துவதற்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டு இருந்தது. அவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர் பயிற்சி முடித்த ஏராளமான வேலையில்லாத பட்டதாரிகள் நேற்று முன்தினத்தில் இருந்து தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கல்வி அலுவலகங்களுக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அதிக அளவில் வந்திருந்தனர்.

இது குறித்து திருப்பூர் கல்வி மாவட்ட அதிகாரி சித்ரா கூறும் போது, காலை முதலே ஏராளமானவர்கள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களின் பெயர் மற்றும் கல்வித்தகுதி, செல்போன் எண் ஆகியவற்றை ஒரு நோட்டில் எழுதச்சொன்னோம். பிறகு அவர்களை சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலகங்களுக்கு சென்று மனு கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. அதன் பேரில் திருப்பூரில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பட்டதாரிகள் விருப்ப மனுவுடன் கல்விச்சான்றிதழ் நகல்களையும் இணைத்துக்கொடுத்தனர். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் பொங்கலூர் ஒன்றியத்தில் மிகக்குறைந்த அளவிலும், திருப்பூர் தெற்கு, வடக்கு மற்றும் தாராபுரம் ஒன்றியங்களில் அதிக அளவிலும் பட்டதாரிகள் விண்ணப்பங்களை கொடுத்துள்ளனர்.

இளங்கலை மற்றும் முதுகலை பட்டத்துடன் பி.எட். முடித்தவர்கள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களிடம் விண்ணப்பங்களை கொடுக்கலாம். ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது என்றார். தகுதியானவர்களுக்கு பணி வழங்கி நாளை (திங்கட்கிழமை) முதல் எந்த வித இடையூறும் இல்லாமல் அனைத்து பள்ளிகளையும் திறக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்துள் ளது. இந்தநிலையில் நேற்று மாலை வரை திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 1,500 பேர் வரை விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story