சிந்தாமணியில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட பெண் பக்தர் சாவு 2 பெண்களை பிடித்து விசாரணை


சிந்தாமணியில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட பெண் பக்தர் சாவு 2 பெண்களை பிடித்து விசாரணை
x
தினத்தந்தி 27 Jan 2019 3:45 AM IST (Updated: 27 Jan 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

சிந்தாமணியில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட பெண் பக்தர் உயிரிழந்தார். இதுதொடர்பாக 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோலார் தங்கவயல்,

சிந்தாமணியில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட பெண் பக்தர் உயிரிழந்தார். இதுதொடர்பாக 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கங்கம்மா கோவில்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி டவுன் கஜானனா சர்க்கிளில் பிரசித்தி பெற்ற கங்கம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கும். இந்த நிலையில் நேற்று முன்தினமும் கங்கம்மா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இரவு 8 மணி அளவில் பெண் ஒருவர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டனர்.

30 பேருக்கு வாந்தி-மயக்கம்

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 30 பேருக்கும் திடீரென்று வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சிந்தாமணி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களில் சிந்தாமணி ஸ்ரீராம்நகரை சேர்ந்த கங்காதர் (வயது 32), அவருடைய மனைவி கவிதா (28), அவர்களது மகள்கள் சரணி, கானவி, மற்றொரு தம்பதி ராஜூ-ராதா ஆகியோர் உள்பட 13 பேர் மேல் சிகிச்சைக்காக கோலார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

கோலார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் கங்காதர், கவிதா, சரணி, கானவி, ராஜூ, ராதா ஆகியோரின் உடல் நிலை மோசமாக இருந்ததால் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிக்சைக்காக கோலார் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பெண் சாவு

அங்கு அவர்கள் 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் கவிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிக்பள்ளாப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி, கங்கம்மா கோவிலுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் கோலார் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் ஆறுதல் கூறினார்.

போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

இதுகுறித்து சிக்பள்ளாப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘சிந்தாமணியில் உள்ள கங்கம்மா கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட பெண் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவிலில் வாரந்தோறும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை நடந்த பூஜையின்போது, 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பக்தர்களுக்கு கேசரி பாத் பிரசாதமாக வழங்கி உள்ளார். ஆனால் கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக கோவில் அர்ச்சகர் சுரேஷ் பாபு மற்றும் கோவில் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகிறோம். கோவிலில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், கோவில் அருகே வணிக வளாகத்தில் உள்ள கண் காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

கலெக்டர் விசாரணை

இதற்கிடையே, சிக்பள்ளாப்பூர் மாவட்ட கலெக்டர் அனிருத் ஷரவண், கங்கம்மாகோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து சுகாதார துறை அதிகாரிகள் கங்கம்மா கோவிலில் குப்பையில் கிடந்த பிரசாதத்தையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எடுத்த வாந்தியையும் பெங்களூருவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

2 பெண்களிடம் விசாரணை

இதுகுறித்து சிந்தாமணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், அந்தப்பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் அமராவதி என்பவர் தான், நேற்று முன்தினம் இரவு கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் கொடுத்தது தெரியவந்தது.

இந்த நிலையில் போலீசார் அமராவதி மற்றும் அதேப்பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகிய 2 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story