திருப்பூரில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 27 பேர் கைது ஜாமீனில் விடுவித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவு


திருப்பூரில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 27 பேர் கைது ஜாமீனில் விடுவித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 Jan 2019 3:25 AM IST (Updated: 27 Jan 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 27 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

திருப்பூர்,

ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டத்தையும் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் மாவட்ட அளவில் உள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

இதில் 3,200 பேரை போலீசார் கைது செய்து 2 மண்டபங்களில் தங்கவைத்தனர். ஒரு திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் இரவு 10.30 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர். அதன்பிறகு மற்றொரு மண்டபத்தில் இருந்தவர்களை 10.45 மணிக்கு போலீசார் விடுவித்தனர்.

ஆனால் முக்கிய நிர்வாகிகள் 27 பேரை திருப்பூர் தெற்கு போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர். மறியலில் ஈடுபட்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்தல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசுக்கு எதிராக செயல்படுதல் ஆகிய பிரிவின் கீழ் 27 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-

1.ராஜேந்திரன் (வயது 50) திருப்பூர், 2.சுந்தரமூர்த்தி (52) திருப்பூர், 3.காளஸ்வரன் (45)கோவை, 4.வெங்கடேஷ்வரன் (53)ஈரோடு, 5.செல்வம் (50) பல்லடம், 6. கனகராஜ் (50)கோவை, 7.காளிதாசன் (34)உடுமலை, 8.குழந்தைசாமி (50) சோமனூர், 9.இளங்குமரன் (43) முத்தூர், 10.செந்தில்குமார் (50) முத்தூர். 11.ஜெயபிரகாஷ் (34) உடுமலை, 12.ராமகிருஷ்ணன் (44)உடுமலை. 13.மணிமாறன், உடுமலை, 14.வாசுதேவன் (47) உடுமலை, 15.ராஜேந்திரன் (52)உடுமலை, 16.முகமது அலி (36) சிவசக்திகாலனி, உடுமலை, 17.பாலசுப்பிரமணி (46)மடத்துக்குளம், 18.ராஜா (39) மடத்துக்குளம், 19.தங்கவேல்(42)மடத்துக்குளம், 20.பிரம்மா பாரி (54) உடுமலை, 21.பாபு (54) உடுமலை, 22.சிங்காரவேலன்(36)உடுமலை, 23.பாலசண்முகம்(54),கோவை, 24.கார்த்திகேயன்(34)பல்லடம், 25.விநாயகமூர்த்தி(51) வெள்ளகோவில், 26.சண்முகசுந்தரம் (51)கோவை, 27.ஈஸ்வரன் (38) உடுமலை.

கைது செய்யப்பட்ட 27 பேரையும் போலீசார் நேற்று காலை திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.2-க்கு அழைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கோர்ட்டு வளாகத்தில் திரண்டனர். இதனால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பின்னர் மாஜிஸ்திரேட்டு பழனி முன்னிலையில் அனைவரையும் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். 27 பேரும் தலா ரூ.10 ஆயிரம் பிணைய பத்திரத்தை கோர்ட்டில் செலுத்த உத்தரவிட்டதுடன், சொந்த ஜாமீனில் அனைவரையும் மாஜிஸ்திரேட்டு விடுவித்தார்.

Next Story