அடுத்த 5 ஆண்டுக்குள் 20 லட்சம் வீடுகள் கட்டப்படும் கர்நாடக வளர்ச்சிக்கு, அரசுடன் மக்கள் கைகோர்க்க வேண்டும் கவர்னர் உரை


அடுத்த 5 ஆண்டுக்குள் 20 லட்சம் வீடுகள் கட்டப்படும் கர்நாடக வளர்ச்சிக்கு, அரசுடன் மக்கள் கைகோர்க்க வேண்டும் கவர்னர் உரை
x
தினத்தந்தி 27 Jan 2019 4:45 AM IST (Updated: 27 Jan 2019 3:29 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 5 ஆண்டுக்குள் 20 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்றும், கர்நாடக வளர்ச்சிக்கு அரசுடன் மக்கள் கைகோர்க்க வேண்டும் என்றும் குடியரசு தினவிழாவில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் 5 ஆண்டுக்குள் 20 லட்சம் வீடுகள் கட்டப்படும் என்றும், கர்நாடக வளர்ச்சிக்கு அரசுடன் மக்கள் கைகோர்க்க வேண்டும் என்றும் குடியரசு தினவிழாவில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார்.

கவர்னர் தேசிய கொடி ஏற்றினார்

பெங்களூரு மானேக்‌ஷா மைதானத்தில் நேற்று குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக கவர்னர் வஜூபாய் வாலா, முதல்-மந்திரி குமாரசாமி காலை 8.55 மணியளவில் விழா மேடைக்கு வந்தனர். பின்னர் காலை 9 மணியளவில் கவர்னர் வஜூபாய் வாலா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் வானில் பறந்தபடி தேசிய கொடிக்கு பூக்களை தூவியது.

பின்னர் திறந்த ஜீப்பில் சென்று கவர்னர் வஜூபாய் வாலா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு, கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார். தனது உரையில் அவர் கூறியதாவது:-

குடகில் 840 வீடுகள்

கர்நாடக மாநில மக்களுக்கு என்னுடைய குடியரசு தினவிழா வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். கர்நாடக மாநிலம் வளர்ச்சியில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு சாதனைகளை மாநில அரசு செய்துள்ளது. கடந்த ஆண்டு(2018) ஆகஸ்டு மாதம் குடகு மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கனமழைக்கு பலர் உயிர் இழந்தனர். ஏராளமானவர்கள் வீடுகளை இழந்து தவித்தனர். விவசாய பயிர்கள், காபி தோட்டங்கள் அழிந்து விட்டது. அரசு மற்றும் தனியார் சொத்துகள் பெருமளவு சேதம் அடைந்தது.

குடகு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கர்நாடக அரசு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கியது. தலா ரூ.9.85 லட்சம் செலவில் 840 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. தற்போது மாநிலத்தில் 156 தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. வறட்சி பாதித்த தாலுகாக்களில் குடிநீர், வேலை வாய்ப்பு உள்ளிட்ட வசதிகளை அரசு செய்து கொடுத்து வருகிறது.

வட்டியில்லா கடன்

2018-19-ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்திற்காக ரூ.2,607 கோடியை மாநில அரசு செலவு செய்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் சுய வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. வட்டியில்லாமல் ரூ.5 லட்சம் வரையிலான கடனும், ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையிலான கடனுக்கு 4 சதவீத வட்டியுடன் கடன் வழங்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கி கொள்ள ‘படவர பந்து’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் குடிநீர் திட்டத்திற்காக ரூ.1,143 கோடி செலவு செய்யப்பட்டு, 15,767 தண்ணீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 70 லட்சத்து 26 ஆயிரம் குடும்பங்களுக்கு கழிவறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 279 நகரங்களை திறந்தவெளி கழிவறை இல்லாத நகரங்களாக மாற்றப்படும்.

20 லட்சம் வீடுகள் கட்டப்படும்

மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வீடு இல்லாதவர்களுக்கு 20 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக 1,014 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு தரைத்தளத்துடன் 14 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். குடியிருப்புகளில் உள்ள தலா ஒரு வீடு ரூ.8 லட்சத்திற்கு விற்கப்படும்.

கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.50 ஆயிரம் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் கடன் தள்ளுபடிக்காக ரூ.876 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. ஏழைகளுக்கு அன்னபாக்ய திட்டத்தின் மூலம் இலவச அரிசி வழங்கும் திட்டத்தை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவது பாராட்டத்தக்கது.

முதலீடுகளை ஈர்ப்பதில்...

நாட்டிலேயே முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் மாநிலமாக கர்நாடகம் திகழ்கிறது. 2014-19-ம் ஆண்டு வரை ரூ.3.49 லட்சம் கோடி முதலீட்டில் 1,958 திட்டங்கள் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் 10 லட்சத்து 28 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்காக ரூ.280 கோடியில் அரசு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் தான் ‘ஆரோக்கிய கர்நாடகா’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெலகாவி, மைசூரு, கலபுரகி, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் அதிநவீன பன்நோக்கு மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சியில் ஒவ்வொருவரின் பங்கும் முக்கியமான தாகும். இதற்காக அரசுக்கு மாநில மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மாநில வளர்ச்சிக்காக அரசுடன் மக்கள் கைகோர்த்து செயல்பட வேண்டும். அப்போது தான் வளர்ச்சியை நோக்கி முன்னேற முடியும்.

இவ்வாறு வஜூபாய் வாலா பேசினார்.

கலை நிகழ்ச்சிகள்

அதைத்தொடர்ந்து, ராணுவ வீரர்கள் சாகசங்களை நிகழ்த்தி காட்டினர். அதை பார்த்து பார்வையாளர்கள் மெய்சிலிர்த்தனர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

குடியரசு தினவிழாவில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, என்.ஏ.ஹாரீஷ் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் விஜய்சங்கர், மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத், மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகர்கள் மற்றும் தாலுகா தலைநகர்களில் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

Next Story