100-வது மாரத்தான் போட்டியில் பங்கேற்று மா.சுப்பிரமணியன் சாதனை


100-வது மாரத்தான் போட்டியில் பங்கேற்று மா.சுப்பிரமணியன் சாதனை
x
தினத்தந்தி 28 Jan 2019 4:15 AM IST (Updated: 27 Jan 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நேற்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்று தனது 100-வது போட்டியை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் நிறைவு செய்தார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன், கடந்த 2014-ம் ஆண்டு மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு ஓடத் தொடங்கினார். அந்த ஆண்டு பிப்ரவரி 9-ந் தேதி 21.1 கிலோ மீட்டர் தூரத்துக்கான மாரத்தான் போட்டியில் ஓடினார்.

இதுவரை 10 வெளிநாடுகளிலும், இந்தியாவில் 18 மாநிலங்களில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில், நேற்று சென்னை பெசன்ட் நகரில் ஆல்காட் பள்ளியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் அவர் பங்கேற்று ஓடினார். இது அவரது 100-வது மாரத்தான் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

மாரத்தான் போட்டிகளில் 25 முறை 21.1 கிலோ மீட்டர் தூரம் பங்கேற்று ஓடியதற்காக, இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் மா.சுப்பிரமணியன் இடம் பிடித்தார். தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு, ஆசிய சாதனையாளர்கள் புத்தகத்திலும் இடம் பெற்றார்.

50-வது மாரத்தான் போட்டியை நிறைவு செய்த அவருக்கு, 2017-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி டெல்லியில் உள்ள லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘வேல்டு ரெக்கார்ட்ஸ்’ பல்கலைக்கழகத்தால் ‘மதிப்புறு முனைவர் பட்டம்’ வழங்கப்பட்டது. அதே ஆண்டு உலக சாதனை சங்கம் அவருக்கு ‘சர்வதேச தங்க டிஸ்க் விருதை’ வழங்கியது. கடந்த ஆண்டு ‘வேல்டு கிங்ஸ் டாப் ரெக் காட்ஸ்’ எனும் உலக சாதனை புத்தகத்திலும் மா.சுப்பிரமணியன் இடம் பிடித்தார்.

மா.சுப்பிரமணியனின் மாரத்தான் சாதனைகளை பாராட்டி, அவருக்கு கடந்த ஆண்டு திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கி.வீரமணியால் ‘தந்தை பெரியார் விருது’ வழங்கப்பட்டது.

Next Story