கோவை, நீலகிரியில் வேலை நிறுத்த போராட்டம் கைதான 15 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
கோவை, நீலகிரி மாவட்டங்களில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 15 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கோவை,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பூதிய முறையை கைவிட வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 22-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் காரணமாக ஆசிரியர்கள் பலர் பள்ளிகளுக்கு செல்லவில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் ஒரு சில பள்ளிகள் 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 4 நாட்களாக மூடப்பட்டன. ஒரு சில பள்ளிகளில் மட்டும் குறைந்த அளவில் ஆசிரியர்கள் வந்திருந்தனர். ஆசிரியர்கள் வராத பள்ளிகளில் மாணவ-மாணவிகளே பாடம் நடத்தினர்.
கோவை மாவட்டத்தில் பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் 5,363 பேருக்கு 17 பி பிரிவின் கீழ் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி கோவை கலெக்டர் அலுவலகம் முன் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஜாக்டோ-ஜியோ முக்கிய நிர்வாகிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அரசு ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையாக பணியிடை நீக்கம் செய்ய அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு ஆசிரியர்கள் பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கோவை மாவட்டத்திலும் இதற்கான நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் தங்கபாசு, தமிழ்நாடு அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் ஹரிகுமார், ஸ்ரீதர் ஆகிய 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதேபோல் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி நாசரூதின் உத்தரவின்படி குன்னூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பிராங்கிளின், விஜயராஜ், கூடலூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் ஷாஜி, கணேசன், அருண்குமார், பத்ரசாமி, நஞ்சுண்டன், விஜயகுமார், வசந்தகுமார், ஸ்ரீவன்சன் ஆகிய 10 பேர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான நகல் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story