மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் கருப்புக்கொடி போராட்டம் வைகோ-பல்வேறு அமைப்பினர் கைது


மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் கருப்புக்கொடி போராட்டம் வைகோ-பல்வேறு அமைப்பினர் கைது
x
தினத்தந்தி 28 Jan 2019 5:00 AM IST (Updated: 27 Jan 2019 10:46 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் கருப்பு கொடி போராட்டம் நடத்திய வைகோ மற்றும் பல்வேறு அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். மேலும் சாலை மறியலால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

மதுரை,

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று மதுரை வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ம.தி.மு.க. சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம், மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை பகுதியில் நடந்தது.

கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாநகர மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன் உள்பட ஏராளமானோர் கருப்பு கொடியுடன் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழக மக்களை வஞ்சிக்கும் மோடி திரும்பி செல்லவேண்டும் என்று கோஷம் எழுப்பினர். பின்பு கருப்பு நிற பலூன்களை வைகோ பறக்க விட்டார். அப்போது அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டது. எனவே இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று தெரிவித்தனர்.

அதற்கு வைகோ, பிரதமர் மோடி மதுரையை விட்டு கிளம்பும் வரை இந்த இடத்தை விட்டு போக மாட்டேன் என்றார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் தள்ளுமுள்ளு உருவானது. இதனால் போலீசார் அங்கிருந்த ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 2 பேர் உள்பட சிலரை கைது செய்வதாககூறி வலுக்கட்டயமாக பஸ்சில் ஏற்றினர். அதை தொடர்ந்து வைகோ போலீஸ் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பின்னர் வைகோ பேசும் போது கூறியதாவது:-

தமிழக மக்களின் நலனுக்கு எதிராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். எனவே நரேந்திர மோடி தமிழகத்திற்கு எப்போது வந்தாலும் அவருக்கு கருப்புக் கொடி காட்டுவேன் என்று தெரிவித்தேன். கஜா புயல் மக்களை வஞ்சித்து விட்டது. பிரதமர் ஹெலிகாப்டரில் வந்தாவது பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு இருக்கலாம். புயல் சேதங்களை பார்வையிடாததுடன், புயலால் 89 பேர் இறந்து போனதற்கு ஒரு அனுதாப செய்திகூட தெரிவிக்கவில்லை. அ

தமிழகத்திற்கு பல்வேறு வகையில் கேடுகளை செய்துள்ளார்கள். அதனால்தான் தமிழ்நாட்டிற்கு மோடி வந்தால் நாங்கள் கருப்பு கொடி காட்டுவோம் என்று தஞ்சாவூர் வயல்வெளியில் இருந்து நான் தெரிவித்தேன். எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசு நமக்கு கொடுக்க வேண்டியது. ஆகவே எய்ம்ஸ் மருத்துவ மனையை நான் எதிர்க்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வைகோ உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

அதே போன்று பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் ராமகிருஷ்ணன், தமிழ்ப்புலிகள் நாகை திருவள்ளுவன், மே-17 இயக்கம் திருமுருகன் காந்தி, தமிழ்தேச மக்கள் முன்னணி பாண்டியன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி குடந்தை அரசன் உள்பட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பெரியார் பஸ் நிலையம் அருகே திரண்டு வந்தனர்.

அவர்கள் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தினர்கள். கூட்டத்தில் மோடி உருவப்படத்தை கிழித்தும், பா.ஜ.க. கொடியை கிழித்து எரித்தும் தங்களின் எதிர்ப்பை காட்டினர். மேலும் அவர்கள் சாலையை மறித்து போராட்டம் செய்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. உடனே அங்கிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 250-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

மேலும் தமிழ் தேசிய கட்சியினர் விளக்குத்தூண் பகுதியில் மாடுகளுடன் வந்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் மாடுகளுடன் வந்த அவர்களை மறித்து கைது செய்தனர்.

Next Story