நெல்லை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்
நெல்லை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை மதுரையில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நெல்லை,
நெல்லை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை மதுரையில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி கட்டும் பணி கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ந் தேதி தொடங்கப்பட்டது. இதன் திட்ட மதிப்பு ரூ.150 கோடி ஆகும். இது மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்புடன் கட்டப்பட்டது.
இதன் கட்டுமான பணி முடிவடைந்தது. 90 சதவீதம் உபகரணங்கள் வந்து விட்டன. ஆஸ்பத்திரியை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவுக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.
பிரதமர் மோடி திறந்து வைத்தார்
இந்த ஆஸ்பத்திரியை மதுரையில் நேற்று நடந்த எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதற்கான விழா புதிய ஆஸ்பத்திரியின் முதல் தளத்தில் நடந்தது. நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி, விழாவை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
330 படுக்கை வசதி
புதிதாக கட்டுப்பட்டு இருக்கும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி 8 மாடி கொண்டதாகும். 330 படுக்கை வசதிகள் கொண்டது. 280 உள்நோயாளிகளுக்கும், 50 தீவிர சிகிச்சை பிரிவுக்கும் படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
இந்த ஆஸ்பத்திரியில் 7 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகளும், கதிரியக்கப்பிரிவு, மைய கிருமி நீக்கும் துறை ஆகியவைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. 10 மின் தூக்கி (லிப்ட்) வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆஸ்பத்திரி பசுமை கட்டிட விதியின்படி கட்டப்பட்டு உள்ளது.
புதிய பணியிடங்கள்
சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயார் செய்யும் அமைப்பும் அமைக்கப்பட்டு இருக்கிறது. வாகனங்கள் நிறுத்தும் இடம் தனியாக கட்டப்பட்டு உள்ளது. 300-க்கும் அதிகமான கார்கள், கனரக வாகனங்களும் நிறுத்தலாம். இந்த ஆஸ்பத்திரியில் 68 பல்நோக்கு சிறப்பு மருத்துவர்கள், 168 செவிலியர்கள் மற்றும் 250 இதர பணியாளர்கள் ஆக மொத்தம் 486 புதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
புதிய ஆஸ்பத்திரியில் 4 மருத்துவம் சார்ந்த சிறப்பு துறைகளான நரம்பியல், இதயவியல், சிறுநீரகவியல், இரைப்பை குடலியல் பிரிவுகள், அறுவை சிகிச்சை சார்ந்த சிறப்பு துறைகளான மயக்கவியல், கதிரியக்கவியல், நோய்க்குறியியல், நுண்ணுயிரியல், உயிர் வேதியியல், உதிரமாற்று மருத்துவத்துறை ஆகிய துறைகளின் கீழ் சேவை வழங்கப்பட உள்ளது.
உள்நோயாளிகள் எண்ணிக்கை
உள்நோயாளிகளின் எண்ணிக்கை 250-ல் இருந்து 280 ஆக உயர்த்தப்படும். சிறுநீரக மாற்று சிகிச்சை அதிக அளவில் செய்ய வாய்ப்பு உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் இருதயம், சிறுநீரகம் மற்றும் பல உறுப்புகளில் ஆன்ஜியோகிராம் செய்வதற்காக உதவும் 128 ஸ்லைஸ் வசதி உள்ளது.
இந்த ஆஸ்பத்திரியின் மூலம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் புதிய உயர் பட்ட மேற்படிப்பு இடங்கள் உயர வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் பிரமாண்ட ஆஸ்பத்திரியாக நெல்லை புதிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி திகழ்கிறது. இதன்மூலம் 486 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 2 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.பி.க்கள்- எம்.எல்.ஏ.க்கள்
இந்த விழாவில் எம்.பி.க்கள் கே.ஆர்.பி.பிரபாகரன், விஜிலாசத்யானந்த், எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, மனோகரன், அரசு முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார், நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மணீஸ் நாராயணவரே, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நெல்லை மருத்துவ கல்லூரி முதல்வர் கண்ணன், துணை முதல்வர் ரேவதி பாலன், நெல்லை மருத்துவ பணிகள் துணை இயக்குனர் செந்தில், ராதாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமலராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story