அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி பேட்டி


அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி பேட்டி
x
தினத்தந்தி 28 Jan 2019 4:15 AM IST (Updated: 28 Jan 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம் என நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி கூறினார்.

நாமக்கல், 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 22-ந் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி சாலைமறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் ஜாக்டோ -ஜியோ ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைவருமான முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி என அனைவரது காலத்திலும் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தான் தீர்வு கண்டனர். தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்து உள்ளார். இதை நாங்கள் வரவேற்கிறோம்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அனுபவம் உள்ளவர். அவரோடோ அல்லது முதல்-அமைச்சரோடோ நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். எங்கே, எப்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அரசு சார்பில் அறிவித்தால் பேச தயாராக உள்ளோம். எந்த பிரச்சினையானாலும், போராட்டமானாலும் பேச்சுவார்த்தையில் தான் முடியும்.

இதற்கிடையே மதுரை ஐகோர்ட்டில் நாளை (இன்று) கல்வித்துறை சார்பில் எங்களுக்கு சாதகமான அறிவிப்புகள் தந்தாலும் அதை ஏற்க தயாராக உள்ளோம். கைது நடவடிக்கை என்பது போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு எடுத்திருக்கும் யுக்தி ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story