பொதுமக்கள், மாணவர்கள் பாதிக்கப்படுவதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் நாமக்கல்லில் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்படுவதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்து பணிக்கு திரும்ப வேண்டும் என நாமக்கல்லில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
நாமக்கல்,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் பிப்ரவரி மாதம் 3-ந் தேதி 2-ம் உலக கொங்கு தமிழர் மாநாடு நாமக்கல்லில் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி நேற்று மாநாட்டு திடலில் இளைஞர் அணி தீரன் படையின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி தலைமை தாங்கினார். கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவையின் தலைவர் தேவராஜன் முன்னிலை வகித்தார். மத்திய மண்டல இளைஞர் அணி செயலாளர் ராயல் செந்தில் வரவேற்று பேசினார். இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
மாநாட்டிற்கு வரும் பெண்களும், மாநாட்டிற்கு வருகிறவர்களும் பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட கட்சியின் இளைஞரணி சார்பில் தீரன்படை அமைக்கப்பட்டு உள்ளது. நாங்கள் நடத்திய எந்த மாநாடும், காவல்துறைக்கோ, பொதுமக்களுக்கோ எந்த தொந்தரவும் கொடுக்காமல், போக்குவரத்துக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் சிறப்பாக செய்து உள்ளோம். இதற்கு காரணம் தீரன் படை தான்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ஆட்சியாளர்களுக்கு பாதிப்பு இல்லை. பொதுமக்களும், மாணவர்களும், பெற்றோர்களும் தான் பாதிக்கப்படுகின்றனர். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு பேச்சுவார்த்தையில் தீர்த்து கொள்ளலாம் என்ற முடிவோடு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பேச்சுவார்த்தைக்கு முன்வந்து பணிக்கு திரும்ப வெண்டும்.
தமிழக அரசு அனுமதி இல்லாமல் காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்ட முடியாது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேகதாது அணை பிரச்சினையை அங்கு உள்ள ஆளும் கட்சியினர் கையில் எடுத்து உள்ளனர். அங்கு அணை கட்டும் முயற்சியை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு மூலம் தமிழக அரசு வலிமையாக போராட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாநாட்டு குழு செயலாளர் மாதேஸ்வரன், தலைவர் நதிராஜவேல், துணை தலைவர் சந்திரசேகர், துணை செயலாளர் பூபதி, பொருளாளர் ஆர்.எஸ்.ஆர். மணி, நிதிகுழு தலைவர் சின்ராஜ், மாநில பொருளாளர் பாலு, முன்னாள் தேர்வாணைய குழு உறுப்பினர் ரத்னசபாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் அணி செயலாளர் பிரகதீஸ்வரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story