கோட்டமேடு பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரூ.18 கோடியில் மேம்பாலம் அமைச்சர் தங்கமணி பணியை தொடங்கி வைத்தார்


கோட்டமேடு பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரூ.18 கோடியில் மேம்பாலம் அமைச்சர் தங்கமணி பணியை தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 28 Jan 2019 3:45 AM IST (Updated: 28 Jan 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் கோட்டமேடு பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரூ.18 கோடியில் மேம்பாலம் அமைக்க அமைச்சர் தங்கமணி பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கோட்டமேடு பகுதியில் ஆனங்கூர், வெப்படை ஆகிய பகுதிகளை குமாரபாளையம் நகரத்துடன் இணைக்கும் சாலையில் வரும் வாகனங்கள் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே இந்த பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ரூ.18 கோடியில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குமாரபாளையம் கோட்டமேடு பகுதியில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடைபெற்றது. ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகுமார சின்னையன் முன்னிலையில், அமைச்சர் தங்கமணி மேம்பாலம் அமைக்க பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

சேலத்தில் இருந்து கோவை செல்லும் நான்கு வழிச்சாலையில், குமாரபாளையம் கோட்டமேடு பகுதியில் ஆனங்கூர், வெப்படை ஆகிய பகுதிகளில் இருந்து குமாரபாளையம் வரும் சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க ரூ.18 கோடியில் நுழைவு மேம்பாலம் அமைக்க அனுமதி பெறப்பட்டு உள்ளது. ஒரு ஆண்டு காலத்திற்குள் இந்த பாலம் கட்டும் பணி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

ஆனங்கூர் ரெயில்வே மேம்பாலம் அமைக்க ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. திட்ட அறிக்கை தயார் செய்தவுடன் மத்திய அரசிடம் நிதி பெறப்பட்டு மேம்பாலம் அமைக்கப்படும். மேலும் காவிரி ஆர்.எஸ்.சில் புதிய நுழைவு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 3 மாத காலத்திற்குள் பாலம் கட்டும் பணிகள் முடிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சேலம் மண்டல திட்ட இயக்குனர் வரதராஜன், இயக்க அலுவலர் ராம்குமாரன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் நாகராஜன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் சுப்பிரமணி, பள்ளிபாளையம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் செந்தில், தாசில்தார் ரகுநாதன் மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story