தூத்துக்குடி அருகே குலையன்கரிசலில் முன்னாள் கலெக்டர் பக்கிள் நினைவு கல்வெட்டு திறப்பு
தூத்துக்குடி அருகே குலையன்கரிசலில் முன்னாள் கலெக்டர் பக்கிள் நினைவு கல்வெட்டை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று திறந்து வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே குலையன்கரிசலில் முன்னாள் கலெக்டர் பக்கிள் நினைவு கல்வெட்டை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று திறந்து வைத்தார்.
திறப்பு விழா
தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசல் விவசாய சங்கம் சார்பில், குலையன்கரிசல் கிராமத்தை விவசாய பூமியாக மாற்றிய முன்னாள் கலெக்டர் பக்கிள் நினைவு கல்வெட்டு மற்றும் உருவப்படம் திறப்பு விழா நேற்று காலை நடந்தது.
விழாவுக்கு ஓய்வு பெற்ற சென்னை துறைமுக துணைத்தலைவர் வீரமுத்துமணி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு பக்கிள் உருவப்படம் மற்றும் நினைவு கல்வெட்டை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பாசன வசதி
1874-ம் ஆண்டு நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த பக்கிள், தாமிரபரணி நதிநீரை சீராக கால்வாய், கரை மற்றும் குளங்கள் அமைத்து பாசனத்துக்கு கொண்டு வந்தார். அதன்படி ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன வசதியை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்கள் வளம் கொழிக்கும் விவசாய நிலங்களாக மாற்றினார். இதில் குலையன்கரிசல் கிராமமும் விவசாய பூமியாக மாறியது. இதனால் குலையன்கரிசல் கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க பக்கிளை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் வகையில் கல்வெட்டு மற்றும் அவரது திருவுருவப்படம் திறக்கப்பட்டு உள்ளது. கால்வாய்களை தூர்வாரி கரைகளை மேம்படுத்திட மாவட்டம் நிர்வாகத்தின் சார்பிலும், தனியார் நிறுவனங்களில் சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்தும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
உள்கட்டமைப்பு வசதி
ஆறுமுகமங்கலத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலும், பேய்குளத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலும், கோரம்பள்ளத்தில் ரூ.11 கோடி மதிப்பிலும் தூர்வாரவும், பழுதடைந்த மதகுகளை ரூ.2 கோடி மதிப்பில் சீரமைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் நியமித்து ஊராட்சியில் அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், புதிதாக உருவாக்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதி மக்களின் கோரிக்கைகளான துணை சுகாதார நிலையம், சாலை வசதிகளை மேம்படுத்துதல், கூடுதலாக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திட அரசு மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கிராம விவசாய சங்க தலைவர் சசிவர்ணசிங், ஓய்வுபெற்ற பேராசிரியர் பால்ராஜ், பாலசந்திரன், கருணாகரன், குணதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story