நீர்நிலைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அறிவுரை


நீர்நிலைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 28 Jan 2019 4:00 AM IST (Updated: 28 Jan 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

நீர்நிலைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரை அறிவுரை வழங்கினார்.

தஞ்சாவூர்,

குடியரசு தினத்தையொட்டி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளில் நேற்று முன்தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தஞ்சை ஊராட்சி ஒன்றியம், மாத்தூர் கிழக்கு ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் 2 விவசாயிகளுக்கு 20 கிலோ உளுந்து விதை, 3 விவசாயிகளுக்கு தார்ப்பாய், விவசாயி ஒருவருக்கு கை பம்பு வழங்கி கலெக்டர் பேசியதாவது:-

கிராம மக்களிடம் அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கவும், திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து கிராம மக்கள் தெரிந்து கொள்ளவும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. நாட்டிற்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டு செயல்படுத்தப்படுவது போல், கிராமங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதித்து செயல்படுத்துவதே கிராம சபை கூட்டத்தின் நோக்கமாகும்.

கிராம சபை கூட்டத்தில் கிராமத்தின் நிதி நிலை குறித்து விவாதிக்கப்படுவதன் மூலம், நிர்வாக வெளிப்படை தன்மை செயல்படுத்தப்படுகிறது. கிராமத்தின் வளர்ச்சியானது, கிராம மக்களின் ஒத்துழைப்பை பொறுத்தே அமைகிறது. நீர்நிலைகளை பாதுகாத்து சுத்தமாக பராமரித்தல், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்தல் உள்ளிட்டவற்றில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

தனிநபர் இல்ல கழிவறைகளை பயன்படுத்தி சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும். கிராமத்தின் வளர்ச்்சிக்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும், எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, கிராம சபை கூட்டங்களில் கிராம மக்கள் தவறாது கலந்துகொண்டு அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்து கொண்டு தங்களின் கிராம வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகேசன், மாவட்ட வழங்கல் அதிகாரி அழகர்சாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நடந்த சமபந்தி நிகழ்ச்சியில் கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டு பொதுமக்களுடன் உணவு சாப்பிட்டார். இதில் பரசுராமன் எம்.பி, மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் துரை.திருஞானம், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இளங்கோவன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story