கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணி: மாவட்டத்தில் 6,841 பேர் தேர்வு எழுதினர் கலெக்டர் ரோகிணி நேரில் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணிக்கு நடந்த எழுத்து தேர்வினை 6,841 பேர் எழுதினர். தேர்வு மையங்களில் கலெக்டர் ரோகிணி நேரில் ஆய்வு செய்தார்.
சேலம்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் தேர்வுக்காக 23 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் கூட்டுறவு சங்கங்களின் எழுத்து தேர்வு நடந்தது. 10 ஆயிரத்து 282 பேர் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் நேற்று நடந்த தேர்வில் 6,841 பேர் கலந்து கொண்டனர். 3,441 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களுக்கு செல்லும் முன்பாக தேர்வர்கள் தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
சேலம் 4 ரோடு அருகேயுள்ள சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த எழுத்து தேர்வினை மாவட்ட கலெக்டர் ரோகிணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று தேர்வு மைய கண்காணிப்பாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது சேலம் டவுன் தாசில்தார் மாதேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் 23 மையங்களில் கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இத்தேர்வினை 6,841 பேர் எழுதினார்கள். 3,441 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்கள் 36 வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து கண்காணிக்கப்பட்டது. மேலும், கண்காணிப்பு பணியில் வருவாய்த்துறை அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள் உள்ளிட்ட 10 குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறுவதை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. எழுத்து தேர்வினை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு இத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. முடிவில் விடைத்தாள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story