கோடைகாலத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்யவேண்டும் அதிகாரிகளுக்கு முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்


கோடைகாலத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்யவேண்டும் அதிகாரிகளுக்கு முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 28 Jan 2019 4:00 AM IST (Updated: 28 Jan 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

கோடைகாலத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அரசு முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் அறிவுறுத்தினார்.

நெல்லை, 

கோடைகாலத்தில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அரசு முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஷில்பா முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்துக்கு தமிழக அரசின் முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பாளருமான ராஜேந்திரகுமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வேளாண்மைத்துறையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சாகுபடிக்கு தேவையான உரங்கள் மற்றும் விதைகள் போதுமான அளவு இருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் வினியோகம்

மாநகராட்சி, நகரசபை, டவுன் பஞ்சாயத்துகளில் தடை இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக குடிநீரில் குளோரின் கலக்க வேண்டும்.

கிராம பகுதிகளில் மேல்நிலை மற்றும் குடிநீர் தேக்கத்தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

பிளாஸ்டிக் ஒழிப்பு

அதிகாரிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான தெரு விளக்கு, பொது கழிப்பறை போன்றவை பழுது பட்டால், அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர்கள் ஆகாஷ் (சேரன்மாதேவி), மணீஸ் நாராயணவரே (நெல்லை), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story