ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை பூங்காவில் படகு சவாரி


ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை பூங்காவில் படகு சவாரி
x
தினத்தந்தி 28 Jan 2019 4:30 AM IST (Updated: 28 Jan 2019 5:51 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகேயுள்ள வைகை அணை பூங்காவில் படகுகுழாமில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி, 

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலமாக விளங்குகிறது. வைகை அணைக்கு விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் சுற்றுலாத்துறை மூலமாகவும், பொதுப்பணித்துறை மூலமாகவும் செய்யப்பட்டுள்ளது. வைகை அணை வலதுகரைப்பூங்கா பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.45 லட்சம் செலவில் படகுகுழாம் கட்டப்பட்டது. 5 பெடல் படகுகள் கொண்டு வரப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் இருந்தது.

இதனால் வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். சுற்றுலா பயணிகளின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து வைகை அணையில் படகுகுழாம் 5 ஆண்டுகளுக்கு பின் தற்போது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 4 பேர் அமர்ந்து பயணம் செய்யும் பெடல் படகு சவாரிக்கு அரை மணிநேரத்திற்கு ரூ.170-ம், 2 பேர் அமர்ந்து பயணம் செய்யும் பெடல் படகு சவாரிக்கு அரை மணிநேரத்திற்கு ரூ.90-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வைகை அணை பூங்காவில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆர்வமாக படகில் பயணம் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் பல ஆண்டுகளுக்கு பின்னர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள படகு குழாமை தொடர்ந்து பராமரிப்பு பணியை தொடர பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறையினரிடம் கேட்டபோது, வைகை அணையில் நிரந்தர பணியாளர்கள் போதுமான அளவு இல்லாத காரணத்தால் ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. போதிய பணியாளர்களை நியமனம் செய்தால் வைகை அணை மற்றும் பூங்கா பகுதிகளை தொடர்ந்து பராமரிக்க முடியும் என்றனர். 

Next Story