நெல்லை மாநகர பகுதியில் பெண்களிடம் சங்கிலி பறித்த 2 பேர் கைது 12 பவுன் நகை மீட்பு
நெல்லை மாநகர பகுதியில் பெண்களிடம் சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 பவுன் நகை மீட்கப்பட்டது.
நெல்லை,
நெல்லை மாநகர பகுதியில் பெண்களிடம் சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 பவுன் நகை மீட்கப்பட்டது.
சங்கிலி பறிப்பு
நெல்லை மாநகர பகுதியில் நடந்து செல்லும் பெண்கள், மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள், வீட்டு முன்பு கோலம் போடும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிமுருகன், கோல்டன் விஜய் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
2 பேர் கைது
இதில் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்த இளையராஜா (வயது 37), தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள கொட்டாரபுரத்தை சேர்ந்த ராஜீ (24) என்பதும், நெல்லை மாநகர பகுதியில் 3 பெண்களிடம் சங்கிலி பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 12 பவுன் நகை, 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை மீட்டனர். பின்னர் 2 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story