கம்பம் அருகே முல்லைப்பெரியாற்றின் கரை உடையும் அபாயம்


கம்பம் அருகே முல்லைப்பெரியாற்றின் கரை உடையும் அபாயம்
x
தினத்தந்தி 28 Jan 2019 4:30 AM IST (Updated: 28 Jan 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் அருகே முல்லைப்பெரியாற்றின் கரை உடையும் அபாய நிலை உள்ளது.

கம்பம், 

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சுரங்கப்பாதையின் வழியாக வந்து ராட்சத குழாய்கள் மூலம் லோயர்கேம்ப்பை வந்தடைகிறது. பின்னர் அங்கு இருந்து ஆற்றின் வழியாக தண்ணீரானது வைகை அணைக்கு செல்கிறது. ஆற்றில் வரும் தண்ணீரை மதகுகள் அமைத்து கால்வாய்கள் மூலம் விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் கம்பம் சுருளிப்பட்டி மணப்படுகை பகுதியில் முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் பிரிக்கப்பட்டு அப்பகுதியில் மதகு அமைத்து 1985-ல் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. தலைமதகில் இருந்து சீலையம்பட்டி வரையில் 22 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாளையம் பரவு வாய்கால் செல்கிறது. பரவு வாய்க்காலில் இருந்து தண்ணீர் பி.டி.ஆர். வாய்க்கால், தந்தை பெரியார் வாய்க்காலுக்கு செல்கின்றன.

வாய்க்காலின் முடிவில் தண்ணீர் அந்தந்த பகுதியில் உள்ள குளத்துக்குப் போய் சேருகிறது. இதன் மூலம் சுமார் 5 ஆயிரத்து 146 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று செழிப்படைகிறது. வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்லும் முல்லைப்பெரியாற்றின் கரை சுருளிப்பட்டி பகுதியில் சேதமடைந்து உடையும் அபாயம் உள்ளது.

கரை உடைந்தால் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதமாவதோடு மட்டுமில்லாமல் பாளையம் பரவு வாய்க்கால், பி.டி.ஆர்., தந்தை பெரியார் வாய்க்கால்களுக்கு தண்ணீர் செல்வது தடைபடும். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் உத்தமபாளையம் பரவு வாய்க்காலுக்கு செல்லக்கூடிய தலைமதகு பகுதிக்கு அருகில் உள்ள மணப்படுகை என்னும் இடத்தில் முல்லைப்பெரியாற்றின் கரை சேதமடைந்துள்ளது. இதுகுறித்து பல ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்காலிகமாக கரை சேதமடைந்த பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி கரையை பலப்படுத்த வேண்டும் என்றனர். 

Next Story